காதுகேளாத வாய்ப்பேச இயலாத - மாற்றுத்திறனாளிகள் தேர்தல் விவரங்களை அறிய சிறப்பு வசதி :

சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவுக்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தலா 20 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வாக்காளர் களுக்குச் செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் காதுகேளாத வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்தல் குறித்த தகவல்களை தெரிவிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் சைகை மொழிபெயர்ப்பாளர், சிறப்பாசிரியர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை மொபைல்போன் காணொலி மூலம் தொடர்பு கொள்வோருக்கு உரிய விளக்கம் அளிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் ஹெச்.கிருஷ்ணன் உன்னி கூறுகையில், காதுகேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் தொடர்பான விவரங்கள் சென்றடையவும், அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி தேனி மாட்டத்தில் 9543813074 என்ற எண்ணுக்கு காலை 10 முதல் மாலை 6 மணி வரை காணொலி மூலம் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE