மாற்றுத்திறனாளி பணியாளர்கள், பாலூட்டும் தாய்மார்கள், இதயநோய் பாதிப்பு உள்ளிட்டவர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் மாநில தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட், மாநில தலைமை தேர்தல் அலுவலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் அனைவரும் வாக்காளர்கள் என்பதை கருத்தில்கொண்டு அவர்கள் அனைவரும் 100 சதவீதம் தங்கள் வாக்கை பதிவு செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு அவர்கள் பணிபுரியும் தொகுதிக்குட்பட்ட பகுதியிலேயே தேர்தல் பணி வழங்க வேண்டும். தேர்தல் பணிபுரியும் வாக்குச் சாவடியிலேயே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலேயே வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
கடந்த தேர்தல்களில் தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் தபால் வாக்குகளை பெறுவதில் ஏற்பட்ட சிரமங்கள், கடைசிநேரக் குளறுபடிகளை தவிர்க்க, தேர்தல் பணிக்கு செல்லும் போலீஸாருக்கு வழங்குவதுபோல் தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் இடத்திலேயே வாக்குச்சாவடி அமைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளி பணியாளர்கள், பாலூட்டும் தாய்மார்கள், இதயநோய் பாதிப்பு உள்ளிட்டவர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை நிறைவேற்றி தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர், அலுவலர்கள் நலன் காக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago