உரிய ஆவணம் இல்லாத பணம் தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. எனவே மது விற்பனைத் தொகையை வங்கியில் செலுத்த எடுத்துச் செல்லும் போது நாணயவாரியாக பட்டியலிட்டு உரிய பதிவேடுகளுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்று பணியாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் தேனி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு மதுபானக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி தினசரி விற்பனைத்தொகையை வங்கியில் செலுத்த கொண்டு செல்லும் போது அதற்கு உரிய ஆதாரங்களை நாணயவாரியாக பதிவேட்டுடன் எடுத்துச் செல்ல வேண்டும். அப்போது கண்டிப்பாக அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும்.
மதுபானங்களை மொத்தமாக விற்பனை செய்யக் கூடாது. அவ்வாறு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் மேற்பார்வையாளர்கள், விற்பனை யாளர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
தணிக்கைக்கு வரும் பறக்கும்படை அதிகாரிகள் மற்றம் தேர்தல் அலுவலர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு தர வேண்டும். கடையின் சராசரி விற்பனையை விட 30 சதவீதத்திற்கு மேல் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அக்கடையின் விற்பனை குறித்து உடனடியாக தணிக்கை செய்யப்படும். கூடுதல் விற்பனைக்கான சரியான விவரத்தை ஆய்வு அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும். கள்ளச்சாராயம், வெளிமாநில மதுபான வகைகள் ஏதேனும் அப்பகுதியில் விற்பனை செய்யப்படுகிறதா என்பதைக் கண்காணித்து மாவட்ட மேலாளரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். கடையின் விற்பனை நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். துண்டுச்சீட்டுக்கள், டோக்கன்கள் அல்லது அடையாள சின்னங்களை பெற்றுக் கொண்டு மதுவகைகளை விற்பனை செய்யக்கூடாது. கடையில் டோக்கன்களை பயன்படுத்தக்கூடாது. கரோனா தொற்று பரவலை தடுக்கும்வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்.
விற்பனையாகும் அனைத்து மதுவகைகளுக்கும் கண்டிப்பாக பில் வழங்க வேண்டும். அரசியல் கட்சிகள் நடத்தும் தேர்தல் கூட்டங்கள், பரப்புரைகளில் கலந்து கொள்ளக் கூடாது. இந்த அறிவுரைகளை பின்பற்றாத பணியாளர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago