சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதி யில் மாவட்டத் தலைநகர் சிவகங்கை இருப்பதாலும், அமைச்சர் தொகுதி என்பதாலும் முக்கியத்துவம் பெறுகிறது. இதுவரை 15 தேர்தல்களை கண்ட இத்தொகுதியில் 5 முறை காங்கிரஸூம், 4 முறை திமுகவும், 3 முறை அதிமுகவும், இரண்டு முறை இந்திய கம்யூ., கட்சியும், ஒருமுறை சுயேச்சையும் வெற்றி பெற்றுள்ளன.
தற்போது சிட்டிங் எம்எல்ஏவாக அமைச்சர் ஜி.பாஸ்கரன் உள்ளார். காங்கிரஸ் காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர் ஆகிய மூன்று தொகுதி களையும் தங்களுக்குச் சாதகமான தொகுதிகளாகக் கருதுகிறது. இதையடுத்து அக்கட்சியினர் அதில் 2 தொகுதிகளையாவது பெற ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை வலியுறுத்தி உள்ளனர். இந்த முறை காரைக்குடியைப் பெற திமுகவினர் போராடி வருவதால், காரைக்குடி கிடைக்காவிட்டாலும் சிவ கங்கையாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் காங்கிரஸார் உள்ளனர்.
ஏற்கெனவே 2 முறை வெற்றிபெற்ற இந்திய கம்யூ. கட்சியும், இந்தமுறை சீட் பெற முயற்சித்து வருகிறது. அதேபோல் மதிமுக மாவட்டச் செயலாளரும், வைகோவின் நண்பருமான புலவர் செவந்தியப்பன் இந்தமுறை எப்படி யாவது சீட் வாங்கிவிட வேண்டும் என முயற்சித்து வருகிறார். அவர் திருப்பத்தூர், காரைக்குடி தொகுதியை விரும்பினாலும், திருப்பத்தூரில் திமுக முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் போட்டியிடுவதாலும், காரைக்குடியை காங்கிரஸ் (அ) திமுகவுக்குத் தான் ஒதுக்குவர் என்பதாலும் சிவகங்கையை நோக்கி திரும்பி உள்ளார். அவர் ஏற்கெனவே 2006 தேர்தலில் சிவகங்கையில் நின்று தோல்வி அடைந்துள்ளார். இதனால் தனக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளார்.
48 பேர் விருப்ப மனு
கடந்த தேர்தலில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளதாலும், ஏற்கெனவே 4 முறை வென்றுள்ளதாலும், தங்களுக்குச் சாதகமான சிவகங்கை தொகுதியை விட்டு தர மாட்டோம் என திமுகவினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் சிவகங்கை தொகுதியைக் கேட்டு திமுக சார்பில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் சேங்கைமாறன், ஜோன்ஸ்ரூசோ, ஐவராட்டம், கோடீஸ்வரி, காயம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவரும், சிவகங்கை நகரச் செயலாளருமான துரை ஆனந்த், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பூபதி, முன்னாள் நகர்மன்றத் தலைவர் சாந்தி மனோகரன், முன்னாள் எம்எல்ஏ மதியரசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சேதுபதிராஜா, ஒன்றியச் செயலாளர் முத்துராமலிங்கம், அண்ணாத்துரை, செழியன், ஆரோக்கியசாமி, கென்னடி, கிருஷ்ணகுமார் உள்ளிட்ட 48 பேர் விருப்ப மனுக்களைக் கொடுத்துள்ளனர்.
மேலும் அவர்கள் தலைநகரான சிவகங்கையை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கக்கூடாது என வலியுறுத்தி உள்ளனர். மு.க.ஸ்டாலினும் அதைப் பரிசீலிப்பதாகக் கூறியுள்ளார்.
இதற்கிடையே நேற்று சிவகங்கை தொகுதியை மதிமுகவுக்கு ஒதுக்கி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த முறை காரைக்குடியைப் பெற திமுகவினர் போராடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago