தேவாரத்தில் இருந்து கேரளாவிற்கு குறுகிய தூரத்தில் செல்லும் வகையில் சாக்கலூத்துமெட்டு சாலை அமைக்கும் திட்டம் குறித்து ப.ரவீந்திரநாத் எம்பி ஆய்வு நடத்தினார்.
தேவாரத்தில் இருந்து ஏலத்தோட்ட விவசாயிகள் ஏராளமானோர் கேரளா விற்கு தினமும் சென்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் கம்பம், கம்பம்மெட்டு வழியாக 87 கி.மீ. தூரம் சுற்றிச் செல்லும் நிலை உள்ளது.
ஆனால் சாக்கலூத்துமெட்டு வனப்பகுதி வழியே 13 கி.மீ. தூரத்தில் எளிதில் செல்லாம். இதற்காக இவ்வழியே சாலை அமைக்க வேண்டும் என்று விவசாயிகளும், தொழிலாளர்களும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் வனத்துறையின் அனுமதி கிடைக்காததால் இத்திட்டம் கிடப்பிலே போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் எம்பி. ரவீந்திரநாத் இச்சாலை அமைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். இதன்படி தற்போது இப்பகுதியை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
பின்பு அவர் கூறியதாவது: எம்ஜிஆர் காலத்தில் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தப் பாதை பயன்பாட்டிற்கு வந்தால் வியாபார, விவசாயம் சார்ந்த பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் பயனுள்ளதாக இருக்கும். சாலை அமைக்க திட்ட மதிப்பீட்டிற்காக ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. டி.மேட்டுப்பட்டியில் இருந்து சாக்கலூத்துமெட்டு வரை உள்ள 13 கி.மீ. சாலையில் 4 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 8.7 கி.மீ. சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. கரோனா பரவலால் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் சில தடைகள் ஏற்பட்டன. தற்போது மத்திய அரசிடம் பேசி இத்திட்டம் விரைவுபடுத்தப்பட்டுள்ளது என்றார்.
மாவட்ட ஊராட்சித் தலைவர் க.ப்ரிதா, உத்தமபாளையம் வட்டாட்சியர் உதயராணி, பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்பிஎம்.சையதுகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago