சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் மாசித் தெப்ப உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் தெப்பக்குளத்தைச் சுற்றிலும் விளக்கேற்றி வைத்து வழிபாடு நடத்தினர்.
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் மாசித் தெப்ப உற்சவ விழா கடந்த பிப்.18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிப்.26-ம் தேதி காலை வெண்ணெய்த்தாழி சேவையில் திருவீதி உலா நடந்தது. பகல் 12 மணி முதல் 1 மணி வரை தெப்பம் முட்டுத் தள்ளுதல் நிகழ்ச்சி நடந்தது. இரவு சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெற்றது.
தெப்பத் திருநாளான பிப்.27-ம் தேதி காலை 6.10 மணிக்கு தங்கத் தோளுக்கினியானில் சுவாமி திருவீதி புறப்பாடாகி, தெப்பமண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் காலை 10.50 முதல் பகல் 11.50 வரை பகல் தெப்பம் நடந்தது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு தெப்பம் கண்டருளல் நிகழ்ச்சி நடந்தது.
திண்டுக்கல், தேனி, மதுரை, தஞ்சை, தூத்துக்குடி, நெல்லை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தெப்பம் நடந்த குளத்தைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான பெண்கள் நெய்விளக்கேற்றி வைத்து வழிபட்டனர். மாவட்ட எஸ்பி ராஜராஜன் மேற்பார்வையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இன்று தீர்த்தவாரி நடக்கிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago