திண்டுக்கல் நகரில் போக்குவரத்து நிறைந்த எட்டு சாலை சந்திப்புகளில் அமைக்கப்பட்ட சிக்னல்களில் ஒன்றுகூட செயல்படவில்லை. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தும் அரசுத் துறையினர், போக்குவரத்து சிக்னல்களை பயன்பாட்டிற்கு கொண்டுவந்து விபத்துக்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வாகன ஓட்டுநர்களிடம் எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சியில் மதுரை-வத்தலகுண்டு சாலை சந்திக்கும் இடமான பேகம்பூரில் சிக்னல் கம்பங்கள் உள்ளன. இது பல ஆண்டுகளாக செயல்படவில்லை. இதனை சரிசெய்து செயல்பாட்டுக்கு கொண்டுவர இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. காட்சிப்பொருளாகவே சிக்னல் கம்பங்கள் நின்று கொண்டுள்ளன. அங்குவிலாஸ் இறக்கம் பகுதியில் அமைக்கப்பட்ட சிக்னல் கம்பங்களின் நிலையும் இதேபோன்று பரிதாபத்திற்குரியதாக உள்ளது. நாகல்நகர் ரவுண்டானா பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னலும் இயங்குவதில்லை.
இந்த பகுதியில் போக்குவரத்து போலீஸார் வெயிலில் நின்றுகொண்டுதான் போக்குவரத்தை சரிசெய்கின்றனர். திண்டுக்கல் நகரின் மத்தியில் பெரியார் சிலைக்கு அருகே உள்ள போக்குவரத்து சிக்னல்கள், அமைக்கப்பட்ட ஒரு சில மாதங்களிலேயே செயல்படாமல் முடிவுக்கு வந்துவிட்டது.
நகரில் போக்குவரத்து மிகுந்த வாணிவிலாஸ் மேடு பகுதியில் நான்குரோடு சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள சிக்னல் மட்டும் அவ்வப்போது செயல்படும். பல நேரங்களில் போக்குவரத்து போலீஸார் சாலையின் நடுவில் நின்று பழைய முறைப்படி போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபடுகின்றனர். பணிக் களைப்பு காரணமாக போக்குவரத்து போலீஸார் சற்று ஒதுங்கி நிற்கும் நேரத்தில் வாகனங் கள் இந்த இடத்தை கடந்து செல்ல பெரிதும் சிரமத்திற்குள்ளாகின்றன.
திருச்சி சாலை-பழநி சாலை சந்திப்பு கல்லறைத் தோட்டம் அருகே அமைக் கப்பட்ட போக்குவரத்து சிக்னலும் இயங்கு வதே இல்லை. திருச்சி சாலை நேருஜி நகர் ரவுண்டானாவில் தனியார் பங்களிப்புடன் ரவுண்டானா சீரமைக்கப்பட்டு சிக்னல்கள் திறப்பு விழா நடந்தது. சாலையைக் கடப்பதற்கும், சிக்னல்கள் மாறுவதற்கும் குறிப்பிட்ட நேரமும் தெரியும் வகையில் டிஜிட்டல் சிக்னல் இங்கு செயல்பாட்டிற்கு வந்தது. இதுவும் சில மாதங்களில் இயக்கத்தை நிறுத்தியது.
கடைசியாக திண்டுக்கல் எம்.வி.எம்., மகளிர் கல்லூரி அருகே சாலை சந்திப்பில் புதிய சிக்னல் அமைக்கப்பட்டது. இதுவும் இயங்காத ஏழு போக்குவரத்து சிக்னல்களுடன் சேர்ந்து எட்டாவது சிக்னலாக காட்சிப்பொருளாக உள்ளது.
திண்டுக்கல் நகரில் மொத்தம் எட்டு இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டும் ஒரு இடத்தில் கூட சிக்னல்கள் செயல்படாமல் உள்ளது வாகன ஓட்டிகளை வேதனைக்குள்ளாக்கி வருகிறது. திண்டுக்கல் நகரின் சாலை சந்திப்புகளில் போக்குவரத்து அதிகம் உள்ள நிலையில், வாகன ஓட்டிகள் சாலைகளின் குறுக்கே செல்லும்போது அவரவர் திறமையைப் பொறுத்து யார் முந்திக் கொள்கிறார்களோ அவர்கள் முதலில் சாலை சந்திப்பை கடந்து செல்வதும், சற்று தயங்குபவர்கள் பொறுமை காத்து கடப்பதும் வாடிக்கையாக உள்ளது.
நகரில் உள்ள எட்டு போக்குவரத்து சிக்னல்களும் செயல்படாததால் அந்த இடங்களில் எப்படி கவனமாக வாகனத்தை இயக்கவேண்டும் என்று தங்கள் திறமையை வளர்த்துக்கொண்டு விட்டனர் திண்டுக்கல் மக்கள். போக்குவரத்து சிக்னல்களை செயல்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏனோ இதுவரை முயற்சி எடுக்கவில்லை.
இந்தநிலையில்தான் திண்டுக்கல் நகரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. விபத்தில்லா பயணத்திற்கு விழிப்புணர்வு தருபவர்கள் திண்டுக்கல் நகரில் உள்ள சாலை சந்திப்புக்களில் ஏற்படும் சிறு சிறு விபத்துக்கள், பெரும் விபத்தாக மாறும் முன், நகரில் உள்ள அனைத்து போக்குவரத்து சிக்னல்களையும் செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் இல்லாவிட்டால் கடமைக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் கடைப்பிடிப்பதில் பலனில்லை என்கின்றனர் திண்டுக்கல் நகர மக்கள்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago