தேனி மாவட்டத்தில் இருந்து திருப்பதிக்கு அரசு, ஆம்னி பேருந்து வசதி இல்லை. இதனால் பக்தர்களும், பொதுமக்களும் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு சென்று பயணிக்க வேண்டியுள்ளது. எனவே நேரடி அரசுப் பேருந்து இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் திண்டுக்கல் கோட்டத்தில் இருந்து தொலைதூரத்திற்கான பேருந் துகள் இயக்கப்படுகின்றன. சென்னை, பெங்களூரூவுக்கு தேனி, குமுளி, போடி, கம்பம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் பல ஊர்களில் இருந்தும் 28 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் மறுமார்க்கத்திலும் பேருந்துகள் இயங்குகின்றன. இருப்பினும் தேனி மாவட்டத்தில் இருந்து திருப்பதிக்கு நேரடி பேருந்துகள் இல்லை. இதனால் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மதுரை அல்லது திண்டுக்கல் சென்று அங்கிருந்து திருப்பதி செல்லும் நிலை உள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் பேருந்துகளையே பலரும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் கரோனா ஊரடங்கில் நிறுத்தப்பட்ட இப்பேருந்து பின்பு மீண்டும் இயக்கப்படவில்லை. இந்த பேருந்து திருச்செந்தூர்-திருப்பதி வழித்தடத்திற்கு மாற்றப்பட்டு தற்போது திண்டுக்கல்லில் 10 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதுவும் விரைவில் புக்கிங் ஆகிவிடுவதால் தேனி மாவட்டத்தில் இருந்து செல்பவர்கள் குறிப்பாக மாவட்ட கடைசி எல்லையில் உள்ள ஊர்களில் இருந்து வருபவர்களுக்கு அதிக சிரமம் ஏற்படுகிறது. தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரை திருப்பதிக்கு ஆம்னி பேருந்து வசதியும் இல்லை. எனவே நேரடி அரசுப் பேருந்தை இயக்க வேண்டும் என்று பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழக பணிமனைச் செயலாளர் பின்னத்தேவன் கூறுகையில், திண்டுக்கல்-திருப்பதி பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிகளவில் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அண்டை மாவட்டங்களுக்குச் சென்று பயணிக்கும் நிலை உள்ளது. திருச்செந்தூரில் இருந்து வரும் திருப்பதி வண்டி இரவு 9 மணிக்கு வருகிறது. ஒதுக்கீடும் குறைவாக உள்ளதால் குடும்பத்துடன் பலரும் சிரமப்படும் நிலை உள்ளது. நேரடி தனிப்பேருந்து இயக்க வேண்டும் என்று தொடர்ந்து நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகிறோம் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago