பழநி அருகே பசுமையாக வளர்ந்தும் நீர்சாவியாகி போன நெற்கதிர்கள் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு

By செய்திப்பிரிவு

பழநி அருகே நெற்பயிர்கள் பசுமை யாக வளர்ந்தும், கதிர்கள் பால் பிடிக்கும் தருவாயில் தொடர்மழை பெய்ததால் நீர்சாவியாகி விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே குதிரையாறு அணைப்பகுதியில் உள்ளது பூஞ்சோலை கிராமம். இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் நெல்சாகுபடி செய்யப்பட்டுள்ளது. போதுமான தண்ணீர் இருந்ததால் நெற்பயிர்கள் செழித்து வளர்ந்தது. தற்போது அறுவடைக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் நெற்கதிர்கள் நீர்சாவியாகி நெல்மணிகளே இல்லாத நிலையில் பயிர்கள் உள்ளன. இதற்கு ஜனவரி மத்தியில் பெய்த தொடர்மழைதான் காரணம் என்கின்றனர் விவசாயிகள்.

பூஞ்சோலை கிராம பகுதி விவசாயிகள் இதுகுறித்து கூறுகையில், நெற்பயிரே பிரதான பயிராக ஆண்டுதோறும் பயிரிட்டு வருகிறோம். குதிரையாறு அணை அருகில் இருப்பதால் தண்ணீர் பிரச்சனை இல்லை. எனவே ஆண்டுதோறும் நெல்சாகுபடி செய்து கணிசமான வருவாயை ஈட்டி வருகிறோம். இந்நிலையில் நெற்பயிர்கள் கதிர்பிடிக்கும் நிலையில் இருந்தபோது ஜனவரியில் பெய்த தொடர் மழை காரணமாக நெல்மணிளுக்குள் தண்ணீர் கோர்த்து விட்டது. இதனால் நெல்மணிகள் நீர்சாவியாகி விட்டது. கதிர்கள் அனைத்தும் பதராகிவிட்டன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. நெற்செடிகள் பசுமையாக வளர்ந்த நிலையில் நெல்மணிகள் இல்லாததால் செலவழித்த தொகையைக்கூட எடுக்க முடியாமல் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து வோளண்மைத் துறையினர் ஆய்வு நடத்தி, விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வர், பழநி கோட்டாட்சியர், வேளாண்மைத்துறை அதிகாரி களுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது, என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்