கொடைக்கானல் மலைப்பகுதிகளில் விளையும் கேரட்டை சந்தைப்படுத்த மதுரைக்கு கொண்டுசெல்ல வேண்டியிருப்பதால் விலைகுறையும் காலங்களில் விவசாயிகள் இழப்பை சந்திக்கின்றனர். இதற்கு கொடைக்கானலிலேயே கேரட் மொத்த மார்க்கெட் அமைத்துத்தர மலை விவசாயிகள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக் கானல் மேல்மலை பகுதிகளில் கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், சவ்சவ் உள்ளிட்ட மலைக் காய்கறிகள் பல ஏக்கர் பரப்பில் விளைவிக்கப்படுகிறது. மேலும் பூண்டு சாகுபடியும் அதிகளவில் நடக்கிறது. மேல்மலைப் பகுதிகளான மன்னவனூர், கவுஞ்சி, பூண்டி, கிளாவரை, பூம்பாறை, அட்டுவம்பட்டி, பள்ளங்கி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கேரட் சாகுபடி நடைபெறுகிறது.
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அனைத்து சீசன்களிலும் தொடர்ந்து கேரட் விளைவிக்கப்படுகிறது. இங்கு விளைவிக்கும் கேரட்டுகளை விற்பனை செய்ய விவசாயிகளுக்கு கொடைக்கானலில் மார்க்கெட் அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது. ஆனால் அரசின் கவனத்திற்கு பலமுறை எடுத்துச்சென்றும் இதுவரை கோரிக்கை நிறைவேறவில்லை.
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் விளையும் கேரட்டுகளை மதுரை மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று மொத்தமாக விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு போக்குவரத்துச் செலவு அதிகமாகிறது. இதனால் வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. மேலும் விலை குறைந்த காலங்களில் கேரட்டுகளை பாதுகாத்து வைத்து விற்பனை செய்ய கிட்டங்கி இல்லாததும் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
இதுகுறித்து கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தை சேர்ந்த கேரட் விவசாயி ஏ.காமராஜ் கூறியதாவது: கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஆண்டுக்கு மூன்று முறை கேரட் பயிரிட்டு அறுவடை செய்யலாம். ஆனால் ஒரு போகம் கேரட், ஒரு போகம் வெள்ளைப் பூண்டு, அடுத்த முறை உருளைக்கிழங்கு என பயிரிடுகிறோம். அனைத்துமே 90 நாள் பயிர்கள் என்பதால் சுழற்சி முறையில் இந்த மூன்றையும் பயிரிடுகிறோம். ஒரு கிலோ கேரட் ஹைபிரிட் விதை ரூ.15 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. இதை வாங்கி நடவு செய்து, களை எடுத்து, மருந்து அடித்து, உரமிட்டு 90 நாட்கள் பராமரித்து பின் அறுவடை செய்யலாம். மழை அதிகம் இருந்தால் செடியிலேயே கேரட் அழுகி பாதிப்பை ஏற்படுத்தும். தீபாவளிக்கு முன்புவரை ஒரு கிலோ கேரட் ரூ.70-க்கு விற்பனையாகி விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை தந்தது. ஆனால் தற்போது ஒருகிலோ ரூ.15-க்குதான் விற்பனையாகிறது. கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து மதுரை மார்க்கெட்டிற்கு கேரட்டை கொண்டு செல்ல போக்குவரத்து செலவே அதிகம் ஆகிறது. இதனால் கேரட்டை அறுவடை செய்யாமல் விட்டுவிடலாமா என்ற நிலையில் விவசாயிகள் உள்ளனர். இந்த முறை கேரட் நடவு செய்தவர்களுக்கு இழப்புதான் ஏற்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் ஒரு கிலோ கேரட் ரூ.40-க்கு விற்பனையானால்தான் விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும். குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப் படுத்த வேண்டும். கொடைக்கானலில் மார்க்கெட் அமைந்தால் தேவைப்படும் வியாபாரிகள் இங்கு வந்து வாங்கிச் செல்வர். விவசாயிகளுக்கு விளைபொருள் மூடைகளை லாரிகளில் கொண்டு செல்லும் போக்குவரத்து செலவும் மிச்சமாகும். தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான பல ஏக்கர் பரப்பு கொடைக்கானலில் உள்ளது. இதில் ஒரு பகுதியை மலைக் காய்கறிகள் மொத்த மார்க்கெட்டாக மாற்றினால் பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து வாங்கிச் செல்வர். விவசாயிகளுக்கு விளைபொருட்களை விற்பதில் சிரமம் இருக்காது. இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago