கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக வாக்குச்சாவடியில் கூட்டத்தைத் குறைக்க ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் இரண் டாக பிரிக்கப்பட உள்ளன. இதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள 428 வாக்குச்சாவடிகளை பிரிப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கி உள்ளன.
புதிதாக துணை வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பாக தேனியில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ் தலைமை வகித்தார். கரோனா தொற்று காரணமாக வாக்குச்சாவடிகளில் அதிக வாக்காளர்கள் காத்திருப்பதையும், நெருக்கமாக இருக்கும் சூழ்நிலையைத் தவிர்க்கவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது.
இதற்காக ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு அவை துணை வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட உள்ளன. இது குறித்து ஆட்சியர் கூறுகையில், தேனி மாவட்டத்தில் தற்போது 1221 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் 428 உள்ளன. இவற்றை இரண்டாக பிரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மாற்றங்கள் தொடர்பான கோரிக்கைகள் இருந்தால் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோரிடம் மனுவாக அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரமேஷ், பெரியகுளம் சார் ஆட்சியர் டி.சிநேகா, உத்தமபாளையம் கோட்டாட்சியர் (பொ) இ.கார்த்திகாயினி, ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் மற்றம் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago