சிவகங்கை மாவட்டம், பெரியகோட்டை அருகே தெக்கூரில் மூலிகை நாப்கின் தயாரித்து கிராமப் பெண்கள் அசத்தி வரு கின்றனர்.
தெக்கூரில் இயங்கும் வ.உ.சி இளைஞர் நற்பணி மன்றத்தினர், கிராம மக்களுடன் இணைந்து கடந்த மக்களவை, உள்ளாட்சித் தேர்தலில் வாக்குக்கு பணம் வாங்க மாட்டோம் என ஊர் எல்லையில் அறிவிப்பு பலகை வைத்து கட்சியினரை கலங்கடிக்க வைத்தனர். இவர்கள் பல்வேறு சமூகப் பணிகள் மூலம் சிறந்த நற்பணி மன்றம் என்ற விருதையும் பெற்றுள்ளனர்.
அக்கிராமப் பெண்கள் முல்லை சுய உதவிக்குழுவை ஏற்படுத்தி மூலிகை நாப்கின் தயார் செய்து அசத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அக்குழுவைச் சேர்ந்த தீபலெட்சுமி கூறியதாவது: எங்கள் பகுதியில் ஏராளமானோருக்கு கர்ப்பப்பை பிரச்சினை ஏற்பட்டது. இதனால் இளம் வயதிலேயே கர்ப்பப்பையை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது பிளாஸ்டிக் நாப்கினை பயன் படுத்தியது தான் காரணம் என்று கூறினர். அதன்பிறகு தான் மூலிகை நாப்கின் தயாரிக்க முடிவு செய்து, 2018-ல் நானும், நித்யா ஜெயலெட்சுமி, ஹேமலதா, பொன்செல்வியும் இணைந்து இதை தொடங்கினோம். கிராமப் பெண்களும், இளைஞர்களும் உதவியாக இருக்கின்றனர்.
நாப்கின் தயாரிக்க வேம்பு, சோற்று கற்றாழை, மஞ்சள், துளசி உள்ளிட்ட 9 வகையான மூலிகையை பயன்படுத்துறோம். ஒரு பாக்கெட்டில் 7 நாப்கின் இருக்கும். வாடிக்கையாளர்கள் விருப்பத்துக்கு எற்ப நாப்கின் அளவுகளை தயாரிக்கிறோம். அதற்கு ஏற்ப விலை நிர்ணயிக்கிறோம். சமூக வலைதளங்கள், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மகளிர் திட்டம் சார்பில் மாதம்தோறும் நடக்கும் கண்காட்சி மூலம் வாடிக்கையாளர்கள் எண் ணிக்கை அதிகரித்துள்ளது.
மேலும் உள்நாடு மட்டுமின்றி அமெரிக்கா வரை எங்களது நாப்கினை வாங்குகின்றனர்.
இத்தொழிலை லாபத்துக்காக நடத்தவில்லை. சமூக நோக்கத்துக் காகவே நடத்துகிறோம். கரோனா காலக்கட்டத்தில் கூரியர் மூலம் அனுப்பினோம். எங்களை பாராட்டி ஊரக புத்தாக்கத் திட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.1.50 லட்சம் மானியம் வழங்கப்பட்டது. சிறந்த மகளிர் குழுவாகவும் தேர்வு செய்துள்ளனர். மாவட்ட ஆட்சியரும் ஊக்கத் தொகை வழங்கி ஊக்கப்படுத்தியுள்ளார்.
தொடக்கத்தில் நாப்கின் தைப்பதை கேவலமாக பேசியவர்கள் கூட தற்போது பெருமையாக பேசுகிறார்கள், என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago