சிவகங்கை அருகே 50 ஏக்கர் நெற்பயிர் நெல் பழம் நோயால் பாதிப்பு அதிகாரிகள் கை விரித்ததால் விவசாயிகள் வேதனை

By செய்திப்பிரிவு

சிவகங்கை அருகே 50 ஏக்கர் நெற்பயிர்கள் நெல்பழம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நோயைக் கட்டுப்படுத்த முடியாது என வேளாண்மைத்துறை அதிகாரிகள் கைவிரித்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

சிவகங்கை அருகே பில்லூர் பகுதியில் 200 ஏக்கருக்கு மேல் நெல் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு, அப்பகுதியில் பெய்த தொடர் மழையால் பல ஏக்கரில் நெற்பயிர்கள் மூழ்கி அழுகின. இதில் தப்பித்த நெற்பயிர்களில் தற்போது நெல்பழம் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்நோயால் அப்பகுதியில் 50 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் பயிர்கள் முழுவதும் நோய் பரவியுள்ளதால் இனி மருந்து தெளித்தாலும் காப்பாற்ற முடியா து என வேளாண்மைத்துறை அதிகாரிகள் கைவிரித் துவிட்டனர். இதனால் விவசாயிகள் வேதனை அடைந் துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயி நாகமுத்து கூறியதாவது: ரூ.1 லட்சத்துக்கு மேல் செலவழித்து 4 ஏக்கரில் நெல் பயிரிட்டிருந்தேன். சமீபத்தில் பெய்த தொடர் மழையால் நெற்பயிர்களை வெள்ளம் சூழ்ந்தது. அதை சிரமப்பட்டு நிலத்தில் இருந்து வெளியேற்றினோம். தற்போது நெல் பழம் பாதிப்பால் பயிர்கள் முழுவதும் வீணாகிவிட்டன. இதனால் சேதமான பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், என்று கூறினார்.

இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: நெல்பழம் நோய், நெல் கதிர் முதிரும்போது அறிகுறிகள் தென்படும். இந்நோய் பனி, குளிர்காலத்தில் வேகமாகப் பரவுகிறது. தற்போது குளிர்ந்த கால நிலையால் இந்நோய் வேகமாகப் பரவி வருகிறது. இந்நோய் தாக்குதல் தென்பட்டவுடனே, நோயுற்ற கதிர்களைச் சேகரித்து எரித்துவிட வேண்டும். மேலும் புரோபிகோனோசல் என்ற மருந்தை லிட்டருக்கு 2 மி.லி. கலந்து தெளிக்கலாம் (அ) ஏக்கருக்கு 500 கிராம் காப்பர் ஹைட்ராக்சைடு மருந்தை நீரில் கலந்து தெளிக்கலாம். ஆனால் அதிகளவில் பரவிவிட்டால் நோயைக் கட்டுப்படுத்த முடியாது, என்று கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்