பாரம்பரிய உடற்பயிற்சி மற்றும் தற்காப்புக் கலையில் ஒன்றான சிலம்பத்தில் கம்பை மனிதர்கள் சுற்றுவர். கம்பத்தில் மனிதர்கள் உடலை வளைத்து சுழல்வதே மல்லர் கம்பம் ஆகும்.
தமிழகத்தை மன்னர்கள் ஆண்ட காலத்தில், மல்லர் கம்பம் விளையாட்டை போர் வீரர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் விளையாடி மகிழ்ந்துள்ளனர். இதன்மூலம் அவர்களது உடலை வலுவாக்க மல்லர் கம்பம் சிறந்த உடற்பயிற்சியாக அமைந்துள்ளது. குறிப்பாக சோழர்களும், பல்லவர்களும் மல்லர் விளையாட்டை போற்றி பாதுகாத்துள்ளனர். அவர்களின் அரசவையில் தலைசிறந்த மல்லர்கள் பலர் இருந்துள்ளனர். மல்லர் கம்ப விளையாட்டிலும், மல்யுத்தத்திலும் சிறந்து விளங்கிய முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் ‘மாமல்லன்’ எனப் பெரு மையோடு அழைக்கப்பட்டதாக வரலாற்றில் குறிப்பு உள்ளது. சம்பம், களரி, மல்யுத்தம், பிடிவரிசை, வர்மக்கலை போன்ற தற்காப்புக் கலை போல் மனிதன் உடலையும் மனதையும் கட்டுபடுத்தி வைக்க உதவும் யோகாசனம் தியானம் போல் மல்லர் கம்பமும் ஒரு தன்னிகரற்ற விளையாட்டாகும்.
மனதையும், உடலையும் கட்டுபடுத்தி செய்யும் உடற்பயிற்சி என்பதால் நம் முன்னோரால் போற்றி வளர்க்கப்பட்டது ‘மல்லர் கம்பம்’. மகாராஷ்டிரா, உத்தி ரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் இந்த மல்லர் விளை யாட்டு இன்றளவும் பிரபலமாக உள்ளது.
இந்தியாவில் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் மல்லர் விளையாட்டை அரசு விளையாட்டாக அங்கீ கரித்துள்ளனர். மகாராஷ்டிராவில் எந்த விழா தொடங்கப்பட்டாலும் இறை வணக் கத்துக்குப் பின்னர் 15 நிமிடங்கள் மல்லர் பயிற்சி நடைபெறுவது வழக்கம்.
தமிழகத்தில் அழிந்துவரும் மல்லர் கம்பம் விளையாட்டை மீட்டு புத்துயிர் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் இதுவரை 180-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மல்லர் கம்பம் பயிற்சி பெற்றுள்ளனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் மல்லர் கம்பம் கழகச் செயலாளர் கலை வளர்மணி லோகசுப்பிரமணியன் கூறி யதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஜனவரியில் மல்லர் கம்பம் கழ கம் 2-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. ஆரம்பத்தில் மாணவர்கள் மல்லர் கம்பத்தைப் பார்த்துப் பயந்தனர். முதலில் 10 பேர் வந்ததே ஆச்சரியமாக இருந்த நிலை மாறி, தற்போது 180 பேருக்கு மேல் ஓராண்டில் பயிற்சி பெற்றுள்ளனர்.
மல்லர் கம்பம் பொதுவாக ஆண் களின் விளையாட்டு என்றாலும், ராமநாதபுரத்தில் 30 மாணவிகள் மல்லர் கம்பம் பயிற்சி பெற்று சாதனை படைத் துள்ளனர். அதுபோல, மரத்தில் கயிறு கட்டி மல்லர் கம்பம் விளையாட்டில் ஏராளமான மாணவிகள் பயிற்சி பெற்றுள் ளனர். இந்த விளையாட்டைக் கற்க மாணவர்களிடம் எந்தக் கட்டணமும் நாங்கள் பெறுவதில்லை.
அண்மைக் காலமாக அமெரிக்கா, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளில் மல்லர் கம்பம் விளையாட்டு பிரபலமடையத் தொடங்கி உள்ளது. அகில இந்திய அளவில் மல்லர் கம்பம் விளையாட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தில் இன்னும் மல்லர் கம்பம் விளையாட்டு இணைக்கப்படவில்லை. அவ்வாறு இணைத்தால் தமிழகமும் மல்லர் வீரர்கள் நிறைந்த மாநிலமாக மாறும் என நம்பிக்கை தெரிவித்தார் லோகசுப்பிரமணியன்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago