பக்கவாதத்தால் உலக அளவில் ஆண்டுக்கு 6 கோடி பேர் பாதிக்கப்படுகின்றனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
உலக பக்கவாத விழிப்புணர்வு நாளை முன்னிட்டு, சென்னை அரசு ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு கையேட்டை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உலகம் முழுவதும் ஆண்டுக்கு 6 கோடி பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களில் 1.50 கோடி பேர் இறக்கின்றனர். இந்தியாவில் ஆண்டுக்கு 6 லட்சம் பேர் பாதிக்கப்படுவதுடன், 1.50 லட்சம் பேர் இறக்கின்றனர்.
மூளை நரம்புகள் செயலிழந்து, ரத்த நாளங்களில் ஏற்படுகிற அடைப்பு மற்றும் உடைப்பு ஆகியவற்றால் ஏற்படுகிற பாதிப்புகள்தான் பக்கவாதம். தலைவலி, பார்வை மங்குதல், திடீர் மயக்கம், கை, கால்களில் தளர்ச்சி, உணர்ச்சி குறைவு, மரத்துப்போதல், பேச்சுக் குளறுதல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று ஏற்படும்போது, 4 மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குச் சென்றால் பாதிப்பை தடுக்க முடியும்.
தமிழகத்தில் அல்ட்டிபேஸ் என்ற மருந்து, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இருப்பு உள்ளது. இந்த மருந்தின் விலை ரூ.35 ஆயிரம்.
சென்னை அரசு பொது மருத்துவமனை சார்பில், 10 வாகனங்கள் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பக்கவாத நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும். தீக்காயங்களுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவுகளை ஏற்படுத்த மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் தாரேஸ் அகமது, ஒருங்கிணைப்பாளர் மருதுதுரை, மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இயக்குநர் குருநாதன், அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜி, நரம்பியல் நிபுணர் லட்சுமி நரசிம்மன், எம்.பி. கலாநிதி வீராசாமி, எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago