சென்னையிலிருந்து பல்வகை மாற்றுத்திறனாளிகள் பயிற்சி மையத்தை செகந்தராபாத்துக்கு மாற்றும் முடிவை ரத்து செய்யக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கஸ்தூரி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: மத்திய சமூக நீதி அமைச்சகத்தின் கீழ் பார்வைத் திறன், மனநல பிறழ்வு, கேட்கும் திறன் மற்றும் எலும்பியல் உள்ளிட்ட பல வகை மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்துவதற்கான தேசிய பயிற்சி மையம் ஏற்படுத்தப்பட்டது. தேசிய அளவிலான இந்த மையம் கடந்த 2005-ல் சென்னையில் தொடங்கப்பட்டது. இந்த மையத்துக்காக தமிழக அரசு சென்னை முட்டுக்காடு பகுதியில் 15 ஏக்கர் நிலம் ஒதுக்கியது.
இந்த மையத்தில் பல்வகை மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்த இளங்கலை, முதுகலை, எம்.பில் மற்றும் டிப்ளமோ உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகள் நடத்தப்பட்டன. கடந்த 15 ஆண்டுகளாக சென்னையில் பயிற்சி மையம் செயல்பட்டு வரும் நிலையில், இந்த மையத்தை திடீரென செகந்தராபாத்திலுள்ள அறிவுசார் திறன் குறைந்த மாற்றுதிறனாளிகளுக்கான மையத்துடன் இணைக்க மே 12-ல் நடந்த இயக்குநர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மையம் செகந்தராபாத்துக்கு மாற்றப்பட்டால் தமிழக மாற்றுத்திறனாளிகளுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே சென்னை பயிற்சி மையத்தை செகந்தராபாத் மையத்துடன் இணைக்கும் முடிவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கு.சாமிதுரை வாதிட்டார். பின்னர் மனு தொடர்பாக மத்திய சமூகநீதி மாற்றுத்திறனாளிகள் துறை செயலர் மற்றும் இயக்குநர், சென்னை மைய இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago