நீண்ட இடைவெளிக்குப்பின் பள்ளிக்கு வரும் மாணவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆலோசனை வழங்கினார்.
ஒன்று முதல் 8-ம் வரை வகுப்புகள் தொடங்கப்பட உள்ள நிலையில், அது தொடர்பாக உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான முன்னேற்பாடு ஆயத்தக் கூட்டம் மதுரை மாவட்ட பள்ளி கல்வித் துறை சார்பில் ஓ.சி.பி.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
மாவட்ட கல்வி அலுவலர்கள் அ.நாராயணன், ச.ராகவன், பி.விஜயா, சா.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.சுவாமிநாதன் தலைமை வகித்து பேசியதாவது: அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தலைமை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும். நீண்ட இடைவெளிக்குப்பின் பள்ளிக்கு வரும் மாணவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்தி நேர்மறை சிந்தனைகள், வாழ்வியல் அனுபவங்களை பகிர்ந்து பள்ளிச் சூழலை மகிழ்ச்சி நிறைந்ததாக மாற்ற வேண்டும். பள்ளி வளாகத்தை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.
இக்கூட்டத்தில் 546 பள்ளி தலைமை யாசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நேர்முக உதவியாளர்கள் ச.சின்னத்துரை, ஜெ.ரகுபதி, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்கள் அ.மகாலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago