தனியார் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்களுடன் மனித கழிவுகளை மனிதர்களைக் கொண்டு அகற்றும் பணிகள் மேற்கொள்ளக் கூடாது என்பது தொடர்பான ஆலோசனை மற்றும் கண்காணிப்புக் கூட்டம் சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்தது.
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் முறையினை தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. கூட்டத்தில் நச்சுநீர் தொட்டிகளை சுத்தப்படுத்தப்படும்போது மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள், கையிருப்பில் வைத்திருக்க வேண்டிய உரிய பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. மேலும், கழிவுநீர் அகற்றும் பணிகளை கண்காணிப்பதற்காக மாநகராட்சி சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் பேசியது:
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு, குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளின் உரிமையாளர்கள் தங்கள் வளாகத்திலுள்ள கழிவுநீர் நச்சுத்தொட்டிகளை பழுது பார்த்தல், சுத்தம் செய்தல், கழிவு நீரகற்றம் செய்தல் போன்ற அபாயகரமான பணிகளில் பாதுகாப்பற்ற முறையில் தொழிலாளர்களை ஈடுபடுத்தக்கூடாது. அப்பணிகள் மேற்கொள்வதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள வாகனங்கள், இயந்திரங்களின் உதவியுடன் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்த பணியாளர்களைக் கொண்டே பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
சிதிலமடைந்த நச்சுத் தொட்டிகள், கழிவறைகள் ஆகியவற்றை பழுது பார்த்தல், கழிவு நீரை அகற்றுதல் போன்ற பணிகளில் பணியாளர்கள் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், சிதிலமடைந்த கட்டுமானங்களை சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் உடனடியாக இடித்து முறையாக அப்புறப்படுத்த வேண்டும். நச்சுக் கழிவுகளை அகற்றும் வாகன உரிமையாளர்கள் எக்காரணத்தைக் கொண்டும் பணியாளர்களை நச்சுத் தொட்டிகளில் இறங்கி பணியாற்றவோ, அடைப்புகளை நீக்கும் பணிகளில் ஈடுபடுத்தவோ கூடாது. தினமும் மாநகரப் பகுதிகளில் நச்சுத் தொட்டிகளை தூய்மைப் படுத்தும் பணிகள் மேற்கொள்வதற்கு முன்பாக எவ்விடத்தில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது என்பதன் விவரத்தை சூரமங்கலம் மண்டலம் - 0427-2387514, அஸ்தம்பட்டி மண்டலம் - 0427-2314646, அம்மாபேட்டை மண்டலம் - 0427 2263161, கொண்டலாம்பட்டி மண்டலம் - 0427-2216616 தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு, முன் அனுமதி பெற வேண்டும்.
மாநகராட்சி கண்காணிப்பு அலுவலர்களின் ஆய்வின்போது சிதிலமடைந்த கட்டுமானங்களை அப்புறப்படுத்தாமல் இருப்பது, மாநகராட்சியின் முன் அனுமதியில்லாமல் கழிவுநீர் அகற்றும் பணிகள் மேற்கொள்வது மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கழிவு நீர் ஓடைகள், மழைநீர் வடிகால்களில் கழிவு நீரினை வெளியேற்றுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
இக்குழுவினர் திடீர் தணிக்கை மேற்கொள்ளும்போது, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, கழிவு நீர் அகற்றும் வாகனங்களில் மனித கழிவுகளை அகற்றும் பணிகளில் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டால் முதல் முறையாக இருக்கும் பட்சத்தில் 1 ஆண்டு கடுங்காவல் தண்டனையுடன் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். 2-ம் முறை கண்டறியப்பட்டால் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையுடன் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
மேலும், மனித கழிவுகளை அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்படும் தொழிலாளர்கள் இறக்க நேரிட்டால் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது உச்சநீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுத்து, 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் மற்றும் இறந்தவரின் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில் மாநகர நல அலுவலர் யோகானந்த், அனைத்து சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் தனியார் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago