என்கவுன்ட்டர் தோட்டாக்களை தேடிய போலீஸார் :

By செய்திப்பிரிவு

போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி சுட்டுக் கொல்லப்பட்ட காட்டுப்பகுதியில் துப்பாக்கி தோட்டாக்களை தேடும் பணியில் போலீஸார் நேற்று ஈடுபட்டனர்.

தூத்துக்குடி அருகே கூட்டாம்புளி திருமலையாபுரத்தை சேர்ந்த வெற்றிவேல் மகன் துரைமுருகன் (42). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 35 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 15-ம் தேதி தூத்துக்குடி அருகே முள்ளக்காடு காட்டுப் பகுதியில் துரைமுருகன் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

தனிப்படை போலீஸார் அவரை பிடிக்க முயன்றபோது போலீஸாரை தாக்கிவிட்டு துரைமுருகன் தப்பியோட முயன்றார். உதவி ஆய்வாளர் ராஜபிரபு, காவலர் டேவிட்ராஜன் ஆகியோர் காயமடைந்தனர். உதவி ஆய்வாளர் ராஜபிரபு துப்பாக்கியால் சுட்டதில், ரவுடி துரைமுருகன் உயிரிழந்தார்.

விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸார் சுட்ட துப்பாக்கி தோட்டாக்கள் ரவுடி துரைமுருகன் உடலில் இல்லை. அவை உடலை துளைத்துவிட்டு வெளியே வந்துவிட்டன. வானத்தை நோக்கி சுட்டதில் ஒரு தோட்டா மற்றும் ரவுடி துரைமுருகன் மீது சுட்டதில் 3 தோட்டாக்கள் என மொத்தம் 4 தோட்டாக்கள் இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் அவற்றை தேடும் பணியில் போலீஸார் நேற்று ஈடுபட்டனர்.

நேற்று காலை முதல் மாலை 5 மணி வரை தேடியும், தோட்டாக்கள் எதுவும் கிடைக்கவில்லை என போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்