விஜயதசமி தினத்தையொட்டி, ஐயப்பன் கோயில்களில் நடைபெற்ற ‘வித்யாரம்பம்’ நிகழ்ச்சியில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்றனர்.
ஆண்டுதோறும் விஜயதசமி தினத்தன்று, குழந்தைகளுக்கு வித்யாரம்பம் எனப்படும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி கோயில்களில் நடத்தப்படும். முதன்முதலாக எழுதத் தொடங்கும் குழந்தைகள், இந்த நாளில், தங்களது கல்விப் பணியை தொடங்கினால், எதிர்காலத்தில் சிறப்பாக வருவர் என்பது ஐதீகம். அதன்படி, நடப்பாண்டு விஜயதசமி பண்டிகையையொட்டி, கோவை சித்தாபுதூரில் உள்ள ஐயப்பன் கோயிலில் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கரோனா தொற்று பரவலைத் தடுக்க, வித்யாரம்பம் நிகழ்ச்சிக்கு தொடர்புடைய குழந்தை மற்றும் அவர்களின் பெற்றோர் என 3 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பச்சரிசி மற்றும் வெற்றிலை, பூஜை பொருட்களுடன் பெற்றோர் தங்கள் குழந்தையை அழைத்துக் கொண்டு வந்தனர்.
குழந்தையை பெற்றோருடன் அமர வைத்து, தட்டில் பச்சரியை கொட்டி ‘ அ’ மற்றும் ‘ ஓம்’ ஆகிய வார்த்தைகளை குழந்தைகளின் கையை பிடித்து, கோயில் குருக்கள் எழுதினர். அதைத் தொடர்ந்து குழந்தைகளும் தனியாக, ஆர்வத்துடன் அந்த வார்த்தைகளை எழுதி தங்களது கல்விப் பணியைத் தொடங்கினர். இதன் பின்னர், குழந்தைகளின் பெயருக்கு சிறப்பு அர்ச்சனை நடத்தப்பட்டு பிரசாதம் அளித்து அனுப்பப்பட்டனர். இதேபோல, மாவட்டத்தில் உள்ள பிற ஐயப்பன் கோயில்களிலும் இந்த எழுத்தறிவித்தல் நிகழ்ச்சிநடந்தது. கோவை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடிகள் மற்றும் தனியாா் பள்ளிகளில் ‘விஜயதசமி’ தினத்தையொட்டி மாணவ, மாணவிகள் சேர்க்கை நேற்று நடந்தது.
திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற ‘வித்யாரம்பம்’ நிகழ்வில், நெல்லில் ‘அ’ என எழுத வைத்து, தங்கவேல் கொண்டு, குழந்தைகளின் நாவில் எழுதும் நிகழ்வும் நடந்தது. தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
நவம்பர், 1-ம் தேதிமுதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், பெற்றோர் பலரும் தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்தனர். இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர்கள் கூறும்போது ‘‘விஜயதசமியையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் 1,512 அங்கன்வாடி பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளுக்கு சேர்க்கை நடந்தது. பெற்றோர் பலரும் அரசுப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் தங்களது குழந்தைகளை சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago