கரோனா தொற்றினால் இறந்தோருக்கான சான்றிதழ் கிடைக்காதவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழுவிடம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் கே.சி.தேவசேனாதிபதி தெரிவித்தார்.
ஈரோட்டில் பிறப்பு, இறப்பு பதிவு குறித்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் மற்றும் தலைமை இணைப்பதிவாளர் (பிறப்பு, இறப்பு) கே.சி.தேவசேனாபதி பேசியதாவது:
குழந்தைகளின் பெயரைப் பதிவு செய்வது பெற்றோரின் கடமையாகும். பெயரில்லாத பிறப்பு சான்றிதழினால் எவ்வித பயனும் கிடையாது. பிறப்பு பதிவு செய்த நாளில் இருந்து, 12 மாதங்கள் வரை கட்டணமின்றி குழந்தையின் பெயரைப் பதிவு செய்யலாம். பெயர் பதிவு செய்திட கால அவகாசம் முடிவுற்ற அனைத்து பிறப்பு பதிவுகளுக்கும், தற்போது 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, பிறப்பினைப் பதிவு செய்யாதவர்கள், ரூ.200 காலதாமதக் கட்டணம் செலுத்தி பெயர் பதிவு செய்து பிறப்பு சான்றிதழ் பெறலாம்.
கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு குணமாக்க இயலாமல், வீட்டிலோ, மருத்துவமனையிலோ 30 நாட்களுக்குள் இறக்க நேரிட்டால் அது கரோனா தொற்று இறப்பாக சான்றிதழ் வழங்கப்படும். மேலும் 30 நாட்களுக்கு மேல் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்தாலும், அது கரோனா இறப்பாக கருதி சான்றிதழ் வழங்கப்படும். கரோனா தொற்று ஏற்படாமல், தற்கொலை உள்ளிட்ட இதர காரணங்களினால் இறக்க நேரிட்டால், அதனை கரோனா தொற்றால் இறந்தவராக ஏற்றுக்கொள்ள இயலாது.
சமீபத்திய அரசாணைப்படி, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கரோனா இறப்பை உறுதிப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது. கரோனா நோயினால் இறந்தவர்களுக்கான, இறப்பிற்கான காரண சான்றிதழ் கிடைக்கப்பெறாதவர் மேற்கண்ட குழுவிடம் விண்ணப்பிக்கலாம். இக்குழு அதனை பரிசீலித்து உரிய சான்றிதழ் வழங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago