நாமக்கல் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவை தொகுதியில் தலா ரூ.3 கோடி மதிப்பில் மினி ஸ்டேடியம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி யில் தமிழகத்தில் இருந்து 12 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். முன்னர் எப்போதும் இல்லாத அளவில் இம்முறை அதிக அளவி லான வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்றது பெரும் சாதனையாக கருதப்படுகிறது. வரும் ஆண்டுகளில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் கூடுதல் எண்ணிக்கையில் தமிழகத்தில் இருந்து வீரர்களை அனுப்ப அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு முதல்கட்டமாக விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள வசதியாக சட்டப்பேரவை தொகுதி தோறும் சிறிய அளவிலான விளையாட்டு மைதானம் (மினி ஸ்டேடியம்) அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலக பயிற்சியாளர்கள் கூறியதாவது:
மினி ஸ்டேடியம் ஏற்படுத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்த வரை மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய இரு தொகுதியிலும் விளையாட்டுத் திடல்கள் உள்ளது.
அதேவேளையில் ராசிபுரம், சேந்தமங்கலம், குமாரபாளையம், பரமத்தி வேலூர் ஆகிய நான்கு தொகுதிகளில் விளையாட்டுத் திடல் இல்லை.
எனவே, இங்கு விளையாட்டுத் திடல் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் விளையாட்டுத் திடல் அமைக்கப்படும். விளையாட்டுத் திடல் இருந்தால் அங்கு வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெறுவது எளிதாக இருக்கும். இதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் ஒலிம்பிக் நகரம் அமைக்கப்பட உள்ளது, என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago