சேலம் அருகே கூட்டாத்துப்பட்டி அரசுப் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு போதிய கழிப்பறை வசதி இல்லாததால், புதிய கழிப்பறை கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கூட்டாத்துப்பட்டி ஊர் பொதுமக்கள் கூறியதாவது:
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூட்டாத்துப்பட்டியில் 30 ஆண்டாக அரசினர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 600 குழந்தைகள் பயின்று வருகின்றனர். குறிப்பாக பெண் குழந்தைகள் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை 300 பேர் படிக்கின்றனர். கரோனா தொற்று பரவலுக்கு பிறகு 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளி திறக்கப்பட்ட நிலையில் கழிவறைகள் பயன்படுத்தும் நிலையில் இல்லை.
குறிப்பாக பெண் குழந்தைகள் சிறுநீர் கழிக்க முடியாமல் இருப்பதன் மூலம் பல்வேறு உடல் பாதிப்புக்குள்ளாகின்றனர். மேலும், கழிவறையில் தண்ணீர் வசதி இல்லாததால், மாதவிடாய் காலங்களில் மாணவிகள் விடுப்பு எடுக்கும் நிலை உள்ளது.
குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு ஊர் இளைஞர் சங்கம் சார்பாக பெற்றோர் ஆசிரியர் கழகம், மற்றும் பள்ளி தலைமையாசிரியரிடம் கழிவறை பராமரிப்பு குறித்து எடுத்து கூறியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
தரமான கல்வி என்பது 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்,தண்ணீருடன் கூடிய கழிவறை, பாதுகாப்பான சூழ்நிலை இருக்கவேண்டும். இதனை கருத்தில் கொண்டு உடனடியாக புதிய கழிப்பறை கட்டிடம் கட்டி கொடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago