ஈரோடு: ரயிலில் பயணித்த கல்லூரி பேராசிரியையிடம், ஒழுங்கீனமாக நடந்து கொண்ட விமானப்படை வீரரை ஈரோடு ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூருவைச் சேர்ந்த 29 வயதான கல்லூரி பேராசிரியை, பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்துக்கு ஐலாண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் 13-ம் தேதி இரவு பயணித்துள்ளார். அதே ரயிலில் எதிரே உள்ள இருக்கையில், இந்திய விமானப்படையில் ஹவில்தாராக பணிபுரியும் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரைச் சேர்ந்த பிரப்ஜோட் சிங் ( 28) என்பவர் பயணித்துள்ளார்.
அப்போது தனியாக பயணம் செய்த பேராசிரியையிடம், பிரப்ஜோட்சிங் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த ரயில் ஈரோடு ரயில்நிலையம் வந்தபோது, ரயில்வே காவல்நிலையம் சென்ற பேராசிரியை இது குறித்து புகார் அளித்தார். இதையடுத்து ரயில்வே போலீஸார், விமானப்படை வீரர் பிரப்ஜோட்சிங்கை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில், அவர் கல்லூரி பேராசிரியையிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த ஈரோடு போலீஸார் பிரப்ஜோட்சிங்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago