பவானிசாகர் அணையிலிருந்து நீர் திறப்பு - பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் குளிக்கத் தடை :

By செய்திப்பிரிவு

பவானி சாகர் அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பவானி ஆற்றில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியாக விளங்கும் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கோவை, ஈரோடு உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இரு நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும், நீலகிரி மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பவானிசாகர் அணையில் விதிமுறைகளின்படி, இம்மாத இறுதிவரை 102 அடி வரை மட்டுமே நீரினைத் தேக்கி வைக்க முடியும் என்பதால், அணைக்கு வரும் நீர் முழுவதும் ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி, பவானிசாகர் அணைக்கு விநாடிக்கு 3327 கனஅடி நீர் வரத்து இருந்தது.

அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு விநாடிக்கு 2300 கனஅடியும், பவானி ஆற்றில் 1000 கனஅடியும் நீர் திறக்கப்பட்டது. அணைக்கான நீர் வரத்து அதிகரித்தால் கூடுதலாக நீர் திறக்கப்படும் என்பதால் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பவானி மற்றும் காவிரி ஆறு, வாய்க்கால்களில் குளிக்கவும், கரையோரப் பகுதியில் சுற்றிப்பார்க்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதனிடையே கவுந்தப்பாடி, கோபி, குண்டேரிப்பள்ளம் உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையளவு (மி.மீ):

கவுந்தப்பாடி 80, எலந்தைக்குட்டை மேடு 47, கோபி 34, பவானி 18, குண்டேரிப்பள்ளம் 12.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்