தஞ்சாவூரில் மாநகராட்சி வணிக வளாகக் கடையை ஏலத்தில் எடுத்து உள்வாடகைக்கு விட்டு மோசடி செய்தவரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் மாநகராட்சி அலுவலர்கள் கடந்த மாதம் ஆய்வு செய்தனர். அப்போது, அங்குள்ள ஒரு கடையில் டாஸ்மாக் செயல்பட்டு வந்தது.
இங்கு அலுவலர்கள் ஆய்வு நடத்தியதில், அந்தக் கடையை திமுகவைச் சேர்ந்த முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆர்.கே.நாகராஜனின் தம்பி ஆர்.கே.மணி கடந்த 2001-ம் ஆண்டில் ரூ.2,114 மாத வாடகைக்கு ஏலத்தில் எடுத்ததும், பின்னர் 1.4.2005 அன்று டாஸ்மாக் நிறுவனத்துக்கு கடையை கூடுதல் உள்வாடகைக்கு கொடுத்துள்ளதும் தெரியவந்தது.
மேலும், இதன் அருகிலுள்ள மற்றொரு கடையையும் ஏலத்தில் எடுத்திருந்த ஆர்.கே.மணி, அந்தக் கடையையும் மற்றொருவருக்கு கூடுதல் வாடகைக்கு விட்டுள்ளார்.
ஏலத்தில் எடுக்கும் கடைகளை பிறருக்கு உள்வாடகைக்கு விடக்கூடாது என்ற ஏல நிபந்தனை உள்ள நிலையில், ஆர்.கே.மணி மாநகராட்சிக்குச் செலுத்தாமல் ரூ.17,92,133 மோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து மாவட்டக் குற்றப்பிரிவில் மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் (பொறுப்பு) கே.அசோகன் புகார் அளித்தார். அதன்பேரில், ஆர்.கே.மணி மீது மோசடி, நம்பிக்கை துரோகம் ஆகிய பிரிவுகளின் கீழ் கடந்த 13-ம் தேதி வழக்கு பதிவு செய்த போலீஸார், நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்.
இதேபோல, தஞ்சாவூர் காந்திஜி சாலை காந்திஜி வணிக வளாகத்திலும் மாநகராட்சி அலுவலர்கள் கடந்த மாதம் ஆய்வு செய்தனர். இதில், தரைத்தளத்தில் உள்ள ஒரு கடையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்ததையறிந்து விசாரணை நடத்தினர்.
இதில், அந்தக் கடையை தஞ்சாவூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கடந்த 2016-ம் ஆண்டில் ரூ.3.84 லட்சம் முன்பணமாகச் செலுத்தி ரூ.15,200 மாத வாடகைக்கு ஏலத்தில் எடுத்துள்ளார். பின்னர், 19.2.2019 முதல் டாஸ்மாக் நிறுவனத்திடம் ரூ.4.50 லட்சம் முன் பணமாகப் பெற்றுக்கொண்டு, மாத வாடகை ரூ.45,000-க்கு உள்வாடகைக்கு விட்டுள்ளார். இதன் மூலம் மணிகண்டன் டாஸ்மாக் நிறுவனத்திடமிருந்து கூடுதலாக வாடகை வசூலித்து, மாநகராட்சிக்குச் செலுத்தாமல் ரூ.15,79,208 மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து மாவட்டக் குற்றப் பிரிவு அலுவலகத்தில் மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் (பொறுப்பு) எஸ்.சங்கரவடிவேல் புகார் அளித்தார். அதன்பேரில், மணிகண்டன் மீது போலீஸார் கடந்த 13-ம் தேதி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago