அரசு கலைக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு விண்ணப்பித்து 2 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், நேர்முகத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகாததால் முதுநிலை பட்டதாரிகள் தவிப்பில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழக உயர்கல்வித் துறையின்கீழ் 109 அரசு கலை, அறிவியல்கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் காலியாகவுள்ள 2,331 உதவி பேராசிரியர் பணியிடங்களை நேர்முகத் தேர்வு மூலம்நிரப்ப உயர்கல்வித் துறை முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) 2019-ம் ஆண்டு செப்டம்பரில் வெளியிட்டது. இந்த தேர்வுக்கு இணையவழியில் சுமார் 44 ஆயிரம் விண்ணப்பித்தனர். சான்றிதழ் பதிவேற்றப் பணிகளும் இணையவழியில் முடிக்கப்பட்டுள்ளன.
2 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், உதவி பேராசிரியர் பணிநியமனம் குறித்து இதுவரை எந்த தகவலையும் தேர்வு வாரியம் வெளியிடவில்லை. இதன்காரணமாக தங்களின் பணிவாய்ப்புகள் குறித்த அச்சம் பட்டதாரிகள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களின் கல்வித்தரமும் கேள்வியாகும் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்த பட்டதாரிகளில் சிலர் கூறியதாவது:
அரசுக் கல்லூரிகளில் 2014-15ம் ஆண்டுக்குபின் புதிதாகஉதவி பேராசிரியர் பணிநியமனம் செய்யப்படாமல் இருந்தது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உயர்கல்வித் துறை முன்வந்தது. விண்ணப்பப்பதிவு மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் செய்யும் பணிகள் 2019-ம் ஆண்டுநவம்பர் மாதத்துடன் முடிந்துவிட்டன. இதையடுத்து ஜனவரியில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, பணி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு மாறாக ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் அலட்சியத்தால்
நேர்முகத் தேர்வு நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின் கரோனா பரவலுக்கு பின்பணிநியமன பணிகள் முழுமையாக முடங்கின.
தற்போது நோய்த்தொற்று குறைந்துவிட்ட பின்பும் உதவி பேராசிரியர் பணிக்கான நேர்முகத்தேர்வு குறித்த எவ்வித தகவலையும் தேர்வு வாரியம் இதுவரை வெளியிடாமல் இருக்கிறது. இதுதொடர்பாக தேர்வு வாரியத்தின் தகவல் மையத்தை தொடர்பு கொண்டாலும் உரிய பதில் அளிப்பதில்லை. இந்த காலதாமதம் பணிவாய்ப்பு குறித்தும், ஏதேனும் முறைகேடுகள் நடைபெற வழிவகுக்குமோ எனவும் அச்சப்பட வைக்கிறது. மேலும், ஏற்கனவே தனியார் கல்லூரிகளில் பணியாற்றிய பலருக்கும் வேலையும் பறிபோய்விட்டது. எனவே, உதவி பேராசிரியர் பணிக்கான நேர்முகத் தேர்வை விரைவாக நடத்தும் நடவடிக்கைகளை தேர்வு வாரியம் விரைவாக மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அரசுக்கல்லூரி பேராசிரியர்கள் கூறும்போது, ‘‘ அரசுக் கல்லூரிகளில் தற்போது 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. நிதிப் பற்றாக்குறையால் கூடுதல் கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்கவும் அரசும் மறுத்துவிட்டது. இதனால் இதர ஆசிரியர்களுக்கு பணிசுமை ஏற்படுகிறது. எனவே, தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு பணியிடங்கள் எண்ணிக்கையை உயர்த்தி விரைவாக அவற்றை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
இது தொடர்பாக உயர்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘உதவி பேராசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்துவிட்டன. கரோனா கட்டுப்பாடுகளால் தேர்வு பணிகளில் தேக்கநிலை ஏற்பட்டது. விரைவில் நேர்முகத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் ’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago