சென்னையில் உள்ள அண்ணா மேலாண்மை நிலையம் - அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி என அழைக்கப்படும் : தலைமைச் செயலர் வெ.இறையன்பு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னையில் உள்ள அண்ணா மேலாண்மை நிலையம் இனி அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி என அழைக்கப்படும் என தமிழக அரசின் தலைமைச் செயலர் வெ.இறையன்பு அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

தமிழக அரசின் தலைமை பயிற்சி நிறுவனமான சென்னையில் இயங்கி வரும் அண்ணா மேலாண்மை நிலையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு இளநிலை உதவியாளர்கள் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் வரை அனைத்து தரப்பினருக்குமான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும், துறை அலுவலர்களுக்கு அலுவலக நடைமுறை, தகவல் பெறும் உரிமை சட்டம், ஒழுங்கு நடவடிக்கை விதிகள், மன அழுத்த மேலாண்மை, குழு மேலாண்மை. ஓய்வுக்கு முந்தைய ஆலோசனை, நேர மேலாண்மை, பேரிடர் மேலாண்மை, தலைமைப் பண்புகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.

இந்நிறுவனம் இதுநாள் வரை அண்ணா மேலாண்மை நிலையம் என அழைக்கப்பட்டு வந்தது. இது அரசு நிர்வாக பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் நிறுவனம் என்பதை கருத்தில்கொண்டு இனிமேல் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி என அழைக்கப்படும். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இத்தகைய பயிற்சி நிலையங்கள் பிற மாநிலங்களில் நிர்வாக பணியாளர் கல்லூரி என்றுதான் அழைக்கப்படுகின்றன. எனவே, அண்ணா மேலாண்மை நிலையம் இனிமேல் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி என அழைக்கப்படும் என தலைமைச் செயலர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்