குமரி மகாதானபுரத்தில் பகவதியம்மன் பரிவேட்டை :

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் 10 நாள் நவராத்திரி திருவிழா கடந்த 6-ம் தேதி தொடங்கியது. கோயில் கொலு மண்டபத்தில் கொலுவீற்றிருந்த பகவதியம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன. இரவில் பல்லக்கில் அம்மன் பவனி வரும் நிகழ்வு நடைபெற்றது.

விழா நிறைவு நாளில் பரிவேட்டை நிகழ்ச்சியை சமூகஇடைவெளியுடன் பாரம்பரிய முறைப்படி நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதிவழங்கியிருந்தது. விஜயதசமியான நேற்று, விழா நிறைவு நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெள்ளி குதிரை வாகனத்தில் பகவதியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் மாலையில் மகாதானபுரம் வேட்டை மண்டபத்துக்கு அம்மன் ஊர்வலம் சென்றது. கோயில் வாசலில் அம்மன் வாகனம் வந்ததும் பாரம்பரிய முறைப்படி போலீஸார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.

பரிவேட்டை ஊர்வலம் சன்னதி தெரு, தெற்கு ரதவீதி, மேலரத வீதி, வடக்கு ரதவீதி, ரயில் நிலைய சந்திப்பு, விவேகானந்தபுரம், பழத்தோட்டம் சந்திப்பு, நான்குவழிச் சாலை வழியாக இரவில் மகாதானபுரத்தை அடைந்தது. அங்கு பாணாசுரனை பகவதியம்மன் வதம் செய்யும் பரிவேட்டை நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் பங்கேற்றனர்.

பரிவேட்டைக்கு பின்னர் வெள்ளி பல்லக்கில் அம்மன் எழுந்தருளி கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்துக்கு வந்து ஆராட்டு நடைபெற்றது. பின்னர் ஆண்டுக்கு 5 விசேஷ தினங்களில் மட்டுமே திறக்கும் கிழக்கு வாசல் வழியாக பகவதியம்மன் கோயிலுக்குள் பிரவேசித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்