சென்னை சேத்துப்பட்டு தனியார் நிறுவன அலுவலகத்தில் - ரூ.72 லட்சம் கொள்ளையடித்த நபர் துப்பாக்கி முனையில் கைது : சினிமா பாணியில் போலீஸார் சுற்றிவளைத்தனர்

By செய்திப்பிரிவு

தனியார் நிறுவன அலுவலகத்தில் ரூ.72 லட்சம் கொள்ளையடித்து தப்பியபிரபல கொள்ளையனை போலீஸார் சினிமா பாணியில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஆசிஷ் பன்சால். இவர், ஆந்திரா மற்றும் பெரும்புதுாரில் வாகன பேட்டரிகளுக்கு அலுமினிய உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இதன் தலைமை நிர்வாக அலுவலகம், சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள கட்டிடம் ஒன்றின் 4-வது தளத்தில் உள்ளது. கடந்த 10-ம் தேதி இந்நிறுவனத்தில் அடையாளம் தெரியாத நபர் உள்ளே நுழைந்து அங்கிருந்த ரூ.72 லட்சம் பணத்தை கொள்ளையடித்து தப்பினார்.

இதுகுறித்த புகாரின்பேரில் சேத்துப்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் கொள்ளையில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், பிள்ளையார் நத்தம், நடுத்தெருவைச் சேர்ந்த பாண்டுரங்கனை கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக அவரிடமிருந்து ரூ.60 லட்சத்து 70,640 ரொக்கம் மற்றும் 1 செல்போன் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட இரும்பு ராடு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

கைதான பாண்டுரங்கன் மீது எழும்பூர் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உட்பட 14 குற்ற வழக்குகள் உள்ளன. மேலும், இவர் ஏற்கெனவே ஒரு முறை குண்டர் தடுப்புக் காவல்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர் என போலீஸார் தெரிவித்தனர்.

கொள்ளையனை கைது செய்தது எப்படி என தனிப்படை போலீஸார் கூறியதாவது: சம்பவம் நடைபெற்ற இடத்தருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பணத்தை கொள்ளையடித்துவிட்டு நபர் ஒருவர் பையுடன் நடந்து செல்வதும் பின்னர் ஆட்டோவில் ஏறிச் செல்லும் காட்சிகளும் பதிவாக இருந்தன. அந்த நபர் சென்ற வழித்தடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது திருவல்லிக்கேணியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் இருந்த தங்கும் விடுதி சென்றோம். ஆனால், அவர் அப்போதுதான் அந்த விடுதியை காலி செய்துவிட்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவர் அங்கு கொடுத்திருந்த செல்போன் எண்ணை வைத்து அவர் பழைய குற்றவாளியான பாண்டுரங்கன் என்பதை உறுதி செய்து கொண்டோம். மேலும், அவர் பயன்படுத்திய செல்போன் சிக்னல் அடிப்படையில் அவர் தியாகராய நகரில்உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி இருப்பதை தெரிந்து கொண்டு அவர் தங்கி இருந்த அறை அருகே தனிப்படை போலீஸார் அறை எடுத்து தங்கினர்.

பின்னர், சினிமா பாணியில் மின்சாரத்தை துண்டித்து, ஓட்டல் ஊழியர்ஒருவர் காபி எடுத்துச் செல்வதுபோல்அதிகாலை 5.30 மணியளவில் துப்பாக்கி முனையில் பாண்டுரங்கனை கைது செய்தோம். அவர் கொள்ளையடித்த பணத்தில் சுமார் ரூ.1 லட்சத்துக்கு பேசியல் (முக அலங்காரம்) செய்துள்ளார். இவ்வாறு தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்