யார் வெளியேறினாலும் காங்கிரஸ் கட்சியை அசைக்க முடியாது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து

By செய்திப்பிரிவு

கட்சியை விட்டு யார் வெளியேறினாலும் காங்கிரஸை அசைக்க முடியாது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறக்கோரி மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று கையெழுத்து இயக்கத்தை நாராயணசாமி தொடங்கினர். அண்ணா சிலை அருகே நடந்த இதன் தொடக்க விழாவில் மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

முதல்வர் நாராயணசாமி முதல் கையெழுத்திட்டு இயக்கத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: தான் செய்வது தவறு என கிரண்பேடி உணர்ந்துள்ளார். இதனால்தான் தனக்கு 3 அடுக்கு பாதுகாப்பு, துணை ராணுவத்தை வரவழைத்துள்ளார். ராஜினாமா செய்து காங்கிரஸிலிருந்து வெளியேறிய அமைச்சர் நமச்சிவாயம், நான் சுதந்திரமாக அமைச்சர்களை செயல்படவிடவில்லை; மத்திய அரசு மற்றும் கிரண்பேடியோடு இணக்கமாக செயல்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

எனது அமைச்சரவையில் சக அமைச்சர்களின்எந்த கோப்பையும் நான் நிறுத்தியதில்லை. நமச்சிவாயம் நேரில் வந்து கோப்புக்கு கையெழுத்து பெற்றுச் செல்வார். எந்த கோப்பை நிறுத்தினேன் என அவர் ஆதாரத்துடன் சொல்ல வேண்டும். ஆதாரமில்லாமல் எதையும் பேசக்கூடாது.

எதிரிகளை மன்னிப்போம், துரோகிகளை மன்னிக்க மாட்டோம். இத்தேர்தலில் நமச்சிவாயம் பாஜகவுக்கு எதிராக பேசிய விமர்சனங்களை வெளியிடுவோம். இதுபோன்று செயல்படுபவர்களை புதுவை மக்கள் புறக்கணிப்பார்கள். யார் நம்மை விட்டு வெளியேறினாலும் காங்கிரஸ் கட்சியை அசைக்க முடியாது. மதசார்பற்ற அணிதான் வலுவான அணி.

ஓடுகாலிகள் ஓடிக்கொண்டேதான் இருப்பார்கள். நிலையாக இருப்பவர்கள் என்றும் நம்மோடு இருப்பார்கள். நாளுக்கு நாள் சட்டையை மாற்றிக் கொண்டிருப்பவர்களை மக்கள் கவனித்து வருகின்றனர் என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், சிபிஎம், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் என பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர். ஆனால் திமுகவினர் யாரும் பங்கேற்கவில்லை.

நமச்சிவாயம் டெல்லி பயணம்

புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் 2-வது அமைச்சராக இருந்த நமச்சிவாயம், நாராயணசாமி மீதான அதிருப்தியால் தனது அமைச்சர், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அவருடன் ஊசுடு (தனி) தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ தீப்பாய்ந்தானும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இருவரின் ராஜினாமாவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் நேற்று நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் இருவரும் டெல்லிக்கு புறப்பட்டனர். டெல்லியில் இன்று (ஜன. 27) பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து கட்சியில் இணைகின்றனர். அதைத்தொடர்ந்து நமச்சிவாயம், வரும் 31-ம் தேதி ஏஎப்டி திடலில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் புதுவை மாநிலம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களையும் பாஜகவில் இணைக்கிறார்.

இதனிடையே இன்று முதல் காங்கிரஸ் கட்சியிலிருந்து அடுத்தடுத்து பல எம்எல்ஏக்கள் விலக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்