கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி அளித்த மனுவில், ‘‘கோவை முதல் சத்தியமங்கலம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அன்னூர் தாலுகாவுக்கு உட்பட்ட கோவில்பாளையம், குரும்பபாளையம் தொடங்கி, தேசிய நெடுஞ்சாலைகளை தவிர்த்து, உட்புற கிராமங்கள், நூற்றுக் கணக்கான விவசாய நிலங்கள், கிணறுகள் ஆகியவற்றை மையப்படுத்தி விரிவாக்கப் பணிகள் நடப்பதால் விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. சாலை விரிவாக்கத்துக்கு விளை நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும்’’ என தெரிவித்துள்ளார். முன்னதாக, ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தினர் கோவை மாவட்டச் செயலாளர் கோவை இனியவன் தலைமையில் அளித்த மனுவில்,‘‘ இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காமாட்சிபுரம், நொய்யல் காலனி பகுதியில் 180-க்கும் மேற்பட்ட அருந்ததியர் இன குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தினர், செங்கத்துறையில் மாற்று இடம் ஒதுக்க முடிவு செய்தனர். 80 குடும்பங்களுக்கு மட்டுமே வீடு ஒதுக்கியுள்ளனர். மீதம் உள்ள 100 குடும்பங்களுக்கும் வீடு ஒதுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago