காவல்துறை மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவை மேம்படுத்த, ‘கிராமக் காவலர்கள்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை மாநகர காவல்துறையின் சார்பில்,காவல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கும் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் இத்திட்டத்தை தொடங்கிவைத்தார்.
இதுதொடர்பாக காவல்துறையினர் கூறும்போது, ‘‘காவல்துறை - பொதுமக்கள் நல்லுறவுத் திட்டத்துக்காக 172 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகர காவல் எல்லைக்குப்பட்ட பகுதிகள் 43 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதிக்கும் 4 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பர். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள், சமூக சேவை செய்வோரை சந்தித்து ‘வாட்ஸ் அப்’ குழு மூலம் ஒருங்கிணைத்து அவர்களுடன் தொடர்பில் இருப்பர். சட்டம் ஒழுங்கு பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும், குற்றச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும் பணியாற்றுவர்’’ என்றனர்.
இந்நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள் ஸ்டாலின் (சட்டம் ஒழுங்கு), உமா (குற்றப்பிரிவு), முத்தரசு (போக்குவரத்து) மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago