அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு 2 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படும் என்ற தமிழக முதல்வர் கே.பழனிசாமியின் அறிவிப்புக்கு, தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் மாநிலச் செயலர் ரா. தாமோதரன் வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில் கடந்த 10 மாதங்களாக கல்லூரிகள் முழுமையாக செயல்பட முடியாத நிலையில் உள்ளன. இதனால், ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயலும் மாணவர்களில் பெரும்பாலானோர் பொருளாதார நிலையில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். மேலும், கரோனா காலத்தில் பல குடும்பங்கள் அன்றாட வருவாயைக்கூட இழந்து விட்டன. ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க இணையதள வசதியின்றி மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு இணைய வசதிக்கான டேட்டாவை இலவசமாக வழங்க வேண்டும் என்று, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் தமிழக முதல்வருக்கு, தமிழக கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு கடந்த ஆக. 21-ம் தேதி கோரிக்கை மனு அளித்தது.
இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார். ஏற்கெனவே இலவச மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி, இந்தியாவுக்கே முன்மாதிரியாக விளங்கும் தமிழக அரசின் இந்த அறிவிப்பை, தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் வரவேற்கிறது. இதற்காக, தமிழக முதல்வர், உயர்கல்வித் துறை அமைச்சர், செயலர், கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இதன் மூலம் தமிழக கல்லூரி மாணவர்கள் அனைவரும் தடையின்றி ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று, பாடங்களைக் கற்கலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago