போகி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் தூய்மைப்பணி

By செய்திப்பிரிவு

போகி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சுத்தப்படுத்தும் வகையில் 'தூய்மையான தூத்துக்குடி' என்ற திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் அறிவித்தார்.

அதன்படி, அனைத்து அரசு அலுவலகங்களிலும், அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் தூய்மைப் பணி நேற்று நடைபெற்றது. தொடர் மழையையும் பொருட்படுத்தாமல் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இப் பணியை மேற்கொண்டனர்.

கோவில்பட்டி நகராட்சியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலகங்களில் இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் பார்வையிட்டார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழாவை, ஆட்சியர் தொடங்கி வைத்தார். கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரித்திவிராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு தூய்மைப் பணியை ஆணையர் வீ.ப.ஜெயசீலன் பார்வையிட்டார். தொடர்ந்து தூத்துக்குடி 2-ம் கேட் ரயில் நிலையம் பகுதியில் மெகா தூய்மைப் பணி நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் அனைத்து காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகளில் தூய்மைப் பணி நடைபெற்றது. இப்பணியை எஸ்பி எஸ்.ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

இதேபோன்று மாவட்டத்தில் உள்ள 403 கிராம ஊராட்சிகள், 19 பேரூராட்சிகள், கோவில்பட்டி, காயல்பட்டினம் ஆகிய 2 நகராட்சிகளிலும் 'தூய்மையான தூத்துக்குடி' திட்டத்தின் கீழ்,தூய்மை பணியாளர்களுடன் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து தூய்மைப் பணியை மேற்கொண்டனர். இப்பணி முடிந்ததும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்