210 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெறும் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு கணிப்பு

By செய்திப்பிரிவு

‘22021 தேர்தலிலும் மக்களின் அன்பை பெற்று அதிமுக ஆட்சி தொடரும். 210 தொகுதிகளில் வெல்வோம்’’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.

தமிழக முதல்வர் கே.பழனிசாமி ஜனவரி 3, 4-ம் தேதிகளில் தூத்துக் குடி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதல் நாள் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி தொகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்கிறார். வரும் 4-ம் தேதி மாலை 4 மணிக்கு கருங்குளத்தில் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

கருங்குளத்தில் விவசாய சங்கபிரதிநிதிகளுடன் முதல்வர் கலந்துரையாடல் நடைபெறும் மண்டபத்தை அமைச்சர் கடம்பூர் ராஜுபார்வையிட்டார். தொடர்ந்து முதல்வர் சுவாமி தரிசனம் செய்யவுள்ள வைகுண்டம் கள்ளர்பிரான் கோயில், மீனவர்களுடன் சந்திப்பு நடைபெறும் வீரபாண்டியன்பட்டினம் தனியார் திருமண மண்டபம், பனைத் தொழிலாளருடனான சந்திப்பு நடைபெறும் அடைக்கலாபுரம் புனித சூசையப்பர் பள்ளிவளாகம், தூத்துக்குடியில் முதல்வர் வழிபடவுள்ள தூய பனிமய மாதா பேராலயம், முதல்வர் தங்கவுள்ள தனியார் தங்கும் விடுதி ஆகியவற்றை அமைச்சர் பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறியதாவது:

கடந்த 2016 தேர்தலின் போதுமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது. வாக்குறுதி அளிக்காத நகரும் நியாயவிலைக் கடை, மினி கிளினிக், மருத்துவக் கல்வியில் 7.5 சதவீத இடஒதுக்கீடு, குடிமராமத்துப்பணி உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளது.

எனவே, 2021 தேர்தலிலும் மக்களின் அன்பை பெற்று அதிமுக ஆட்சி தொடரும். 210 தொகுதிகளில் வெல்வோம். கருத்துக்கணிப்புகளும் அதைத்தான் சொல்கின்றன. தூத்துக்குடி வரும் முதல்வருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படும் என்றார்.

ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், வைகுண்டம் எம்எல்ஏ எஸ்.பி.சண்முகநாதன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்பிரியா, ஏஎஸ்பி ஹர்ஷ் சிங்உடனிருந்தனர்.

அதிமுக ஆலோசனை கூட்டம்

தொடர்ந்து முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சார்பில் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

டிஐஜி ஆய்வு

கோவில்பட்டி, எட்டயபுரத்தில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்கள், அவர் செல்லும் வழித்தடங்களை திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு பார்வையிட்டார்.

முதல்வர் வருகையின் போது தேவையான போலீஸ் பாதுகாப்பு மற்றும் வழித்தடங்கள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் கேட்டறிந்தார். அப்போது, தூத்துக்குடி மாவட்ட ஏடிஎஸ்பி செல்வன், கோவில்பட்டி டிஎஸ்பி கலைக்கதிரவன் மற்றும் போலீஸார் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்