தூத்துக்குடி மாவட்டத்தில் 2020-ம் ஆண்டில் கொலை, விபத்து உயிரிழப்புகள் குறைவு 128 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் 2020-ம்ஆண்டில் 128 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்ட காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில்2020-ம் ஆண்டு பாலியல் குற்றவாளிகள் 19 பேர், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தவர்கள் 10 பேர், மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் 2 பேர் உள்ளிட்ட 128 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2019-ம் ஆண்டு 77 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் 2020-ல் கூடுதலாக 51 பேர் இச்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கொலை வழக்குகள்

2020-ம் ஆண்டு மொத்தம் 58 கொலை வழக்குகள் பதிவாகி, மொத்தம் 180 குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 2019-ம் ஆண்டில் 72 கொலை வழக்குகள் பதிவான நிலையில் தற்போது 14 குறைந்துள்ளன. கூட்டுக்கொள்ளை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்றவை தொடர்பாக பதிவான 443 வழக்குளில் 225 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.1,64,89,960 மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போதைப்பொருள்

2020-ம் ஆண்டில் போதை தடுப்பு குற்றத்தில் 168 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.61,35,110 மதிப்புள்ள 25 கிலோ சரஸ் போதைப்பொருள் மற்றும் 134 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2020-ல் 95 வழக்குகள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுபோல் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்றவை தொடர்பாக 841 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.58,54,396 மதிப்புள்ள 9,587 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 327 வழக்குகள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மணல் திருட்டு

கடந்த ஆண்டு சட்ட விரோதமாக ஆற்றுமணல் திருட்டு மற்றும் கடத்தல் சம்பந்தமாக 126 வழக்குகள் பதிவான நிலையில், 159 பேர் கைது செய்யப்பட்டு 187 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இருவர் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். முந்தைய ஆண்டு 119 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 223 பேர் கைது செய்யப்பட்டு, 144 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சாலை விபத்துகள்

2020-ல் 233 அபாயகரமான சாலை விபத்து வழக்குகள் உட்பட 1,004 சாலை விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளன, இவற்றில் 252 பேர் மரணமடைந்துள்ளனர். முந்தைய ஆண்டு 272 சாலைவிபத்து வழக்குகள் உட்பட 1,217 வழக்குகள் பதிவாகியுள்ளன, இவற்றில் 303 பேர் மரணமடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 213 சாலை விபத்துகள் குறைவாக நடைபெற்றுள்ளன. உயிரிழப்பு எண்ணிக்கையும் 51 குறைந்துள்ளது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2020-ல் 95 வழக்குகள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்