வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவருக்குச் சொந்தமான நிலம் பாலூர் கிராமத்தில் உள்ளது. 1.40 ஏக்கர் அளவுள்ள நிலத்தை ஆதிதிராவிடர்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்குவதற்காக வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கடந்த 2003-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. இதற்கான இழப்பீட்டு தொகை போதவில்லை எனக் கூறி கடந்த 2004-ம் ஆண்டு நீலகண்டன் வழக்கு தொடர்ந்தார்.
வேலூர் நில ஆர்ஜித சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் முடிவில் நீலகண்டனுக்கு ரூ.52 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால், இழப்பீடு வழங்காமல் காலம் கடத்தியதால் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலரின் கார் மற்றும் அலுவலகப் பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக கார் உள்ளிட்ட அலுவலகப் பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் நேற்று ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களை, மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சமாதானம் செய்ததுடன் ஒரு மாதம் காலக்கெடு வாங்கினர். இதையடுத்து ஜப்தி முயற்சி கைவிடப்பட்டது. இந்த ஜப்தி முயற்சி சம்பவத்தால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago