கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர் உடலை - உடை அணிவிக்காமல் அனுப்பிய இலங்கை கடற்படை : உயர் நீதிமன்றத்தில் தகவல்

By செய்திப்பிரிவு

இலங்கை கடற்பகுதியில் உயிரிழந்த புதுக்கோட்டை மீனவர் உடலை உடைகள் அணிவிக்காமல் இந்தியாவுக்கு அனுப்பிய விவகாரத்தில் மத்திய அரசை எதிர்மனுதாரராக சேர்த்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த பிருந்தா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

என் கணவர் ராஜ்கிரண் மீனவர். அவர், சுகந்தன், சேவியர் ஆகியோருடன் அக்டோபர் 19-ல் விசைப்படகில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தங்களது ரோந்து கப்பல் மூலம் விசைப்படகில் மோதியுள்ளனர்.

இதனால் விசைப்படகு கடலில் மூழ்கியது. என் கணவர் கடலில் மூழ்கி விட்டார். சுகந்தன், சேவியர் உயிருடன் மீட்கப்பட்டனர். 2 நாட்களுக்கு பிறகு என் கணவரின் உடல் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. கணவர் உடலில் காயங்கள் இருந்தன. அவரை இலங்கை கடற்படை கொலை செய்திருக்கலாம். எனவே கணவர் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் ஆர்.கருணாநிதி வாதிடுகையில், மனுதாரரின் கணவரின் உடல் மறு பிரேதபரிசோதனை செய்யப்பட்டதில் அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. ஆனால் இலங்கையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு உடல் தைக்கப்படாமல், உடைகள் அணிவிக்கப்படாமல் அப்படியே பெட்டியில் வைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு மனித உடலுக்கான மதிப்பை மீறுவதாகவும், வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக இலங்கையில் இருந்து உயிரிழந்த மீனவர்களின் உடல்களை அனுப்பும்போது அந்த உடலுக்கான உரிய மரியாதை வழங்கப்படுவதில்லை. இது தொடர்பாக உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் மத்திய அரசை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்க்கிறது. மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிச.13-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்