தஞ்சாவூரில் மாநகராட்சி அறிவுறுத்தியும் காலி செய்யாததால் - 54 கடைகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு :

தஞ்சாவூர் அண்ணா சிலை அருகே உள்ள 54 கடைகளை காலி செய்ய மாநகராட்சி அலுவலர்கள் அறிவுறுத்தியும், வியாபாரிகள் காலி செய்யாததால், அக்கடைகளுக்கான மின் இணைப்பு நேற்று துண்டிக்கப்பட்டது.

தஞ்சாவூர் அண்ணா சிலையில் இருந்து பனகல் கட்டிடம் செல்லும் சாலையோரத்தில் செல்போன் கடைகள், துணிக் கடைகள், தேநீர் கடைகள், காலணி விற்பனை கடைகள் என 54 கடைகள் உள்ளன. மழைநீர் வடிகால் மீது இக்கடைகள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்தக் கடைகளை அப்புறப்படுத்தி மழைநீர் வடிகால் கட்ட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

எனவே, இக்கடைகளைக் காலி செய்யுமாறு வியாபாரிகளிடம் மாநகராட்சி அலுவலர்கள் அறிவுறுத்தி வந்தனர்.

இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், தற்போது கடைகள் இருக்கும் இடத்துக்கு பின் பகுதியில் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே, நவ.8-ம் தேதி இங்குள்ள கடைகளைக் காலி செய்யவதற்காக மாநகராட்சி அலுவலர்கள் பொக்லைன் இயந்திரத்துடன் சென்றனர். அப்போது, அங்கிருந்த வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், கடைகள் இடிக்கப்படவில்லை. இதையடுத்து, இக்கடைகளுக்கான மின் இணைப்பைத் துண்டிப்பதற்காக மாநகராட்சி அலுவலர்கள் நவ.16-ம் தேதி சென்றபோது, அவர்களை வியாபாரிகளும், திமுகவினரும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மாநகராட்சி அலுவலர்கள் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில், மாநகராட்சி அலுவலர்கள் முன்னிலையில், காவல் துறையினரின் பாதுகாப்புடன் அண்ணாசிலை அருகில் உள்ள 54 கடைகளுக்கான மின் இணைப்பு நேற்று பிற்பகல் துண்டிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வியாபாரிகள் கடைகளை நேற்று அடைத்திருந்தனர். இக்கடைகளைக் காலி செய்வதற்கு 2 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கடைகளில் உள்ள பொருட்களை வியாபாரிகள் அகற்றிய பிறகு நவ.26-ம் தேதி கடைகளை இடித்து அகற்றும் பணி தொடங்கப்படும் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE