மாநில அளவிலான கலைத் திருவிழா - தஞ்சாவூர் மாவட்டத்துக்கு 6 பிரிவுகளில் பரிசு :

By செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான கலைத் திருவிழாவில் தஞ்சாவூர் மாவட்ட மாணவ, மாணவிகள் 6 பிரிவுகளில் பரிசுகளைப் பெற்றனர்.

மாணவர்களிடையே படைப்பாற்றலை வளர்க்கவும், நமது பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையினரிடம் உயிர்ப்புடன் வைத்திருக்கவும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டிகள் ஏற்கெனவே மாவட்ட அளவில் நடைபெற்றன.

இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் அக்.25, 26-ம் தேதிகளில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்ற 18 மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றனர்.

சேலம் மாவட்டத்தில் நவ.16 முதல் 18-ம் தேதி வரை மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டி 9 பிரிவுகளில் நடத்தப்பட்டது. இதில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இதுவரை இல்லாத அளவில் 6 பிரிவுகளில் பரிசுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பொம்மைகள் செய்தல் பிரிவில் மாரியம்மன் கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் சரண் முதல் பரிசும், கருவி இசை வாசித்தல் பிரிவில் கும்பகோணம் அண்ணா அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவர் பாரதிராஜா 2-ம் பரிசும், செவ்வியல் நடனப் பிரிவில் பட்டுக்கோட்டை லாரல் மேல்நிலைப் பள்ளி மாணவர் ரவிச்சந்திரன் 2-ம் பரிசும், பட்டுக்கோட்டை ஃபைவ் ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி கங்கை 3-ம் பரிசும், நாட்டுப்புற நடனப் பிரிவில் ஆதனகோட்டை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி சரண்யா, தஞ்சாவூர் கல்யாணசுந்தரம் மேல்நிலைப் பள்ளி மாணவர் நாகார்ஜுன் 3-ம் பரிசும் அதற்கான கோப்பைகள், பதக்கங்கள், சான்றிதழ்களைப் பெற்றனர்.

இதில் மாணவர் சரண் தேசிய அளவில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றுள்ளார்.

மாவட்ட மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான பாராட்டு விழா தஞ்சாவூர் புனித ஜோசப் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், பரிசு பெற்ற மாணவ, மாணவிகளையும், ஒருங்கிணைப்பாளரான கல்யாண சுந்தரம் பள்ளி கலை ஆசிரியர் ரவீந்திரனையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.சிவகுமார் பாராட்டினார்.

இவ்விழாவில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் ரமேஷ், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாடசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று முன்தினம் பாராட்டினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்