தற்போது பாதிக்கப்பட்டுள்ள குறுவை அறுவடை பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால், சம்பா, தாளடி பயிர்கள் பேரழிவை சந்தித்துள்ளன. கடந்த ஜனவரியில் மழையால் சம்பா, தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டபோது, பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து, ஹெக்டேர் ஒன்றுக்கு இடுபொருள் இழப்பீடாக அதிமுக அரசு ரூ.20 ஆயிரம் வழங்கியது. ஆனால், தற்போதைய மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இடுபொருள் இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.6,300 ஆக அரசு குறைந்திருப்பது விவசாயிகளை ஏமாற்றும் செயலாகும்.
எனவே, தமிழக அரசு இதை மறுபரிசீலனை செய்து, பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி பயிர்களுக்கு பாதிப்புக்கு ஏற்ப ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். தற்போது பாதிக்கப்பட்டுள்ள குறுவை அறுவடை பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் என அறிவித்திருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
எனவே ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடாக உயர்த்தி வழங்க அரசு முன்வர வேண்டும் என்றார். கோட்டூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் எம்.தெய்வமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago