மதுரை: மேலையூர்-2 நெல் கொள்முதல் நிலையம் கூத்தக்குடி கிராமத்துக்கு மாற்றப்படாது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் மேலையூரைச் சேர்ந்த செல்வகுருநாதன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
மேலையூரில் 850 விவசாயக் குடும்பங்கள் வசிக்கின்றன. மேலையூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது.
இங்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், ஆற்றுப்பாலம் சேதமடைந்ததால் நெல் கொள்முதல் நிலையம் தற்காலிகமாக மேலையூரில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள பனங்கட்டாங்குடிக்கு மாற்றப்பட்டது. ஆற்றுப்பாலம் வேலை முடிந்ததும் நெல் கொள்முதல் நிலையம் பழைய இடத்துக்கு மாற்றப்பட்டது. இங்கு தானிய சேமிப்பு கிடங்கும் உள்ளது. இதனால் விவசாயிகள் தங்களுடைய நெல் மூட்டைகளை எடுத்துச் செல்வதற்கு ஏற்ற இடமாக மேலையூர் அமைந்துள்ளது.
இந்நிலையில் மேலையூர்-2 நெல் கொள்முதல் நிலையத்தை கூத்தக்குடிக்கு மாற்றுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
தமிழ்நாடு குடிமைப் பொருள் விநியோகத் துறை தரப்பில், மேலையூர்-2 நெல் கொள்முதல் நிலையம் மாற்றப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்டு வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago