இலங்கை ரோந்து கப்பல் மோதி உயிரிழந்த புதுக்கோட்டை மீனவரின் உடலை நவ. 18-ல் மறு பிரேதப் பரிசோதனை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த பிருந்தா, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
எனது கணவர் ராஜ்கிரண் மற்றும் சுகந்தன், சேவியர் ஆகியோர் அக்.19-ல் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி என் கணவர் இருந்த படகு மீது ரோந்து கப்பலால் மோதினர். இதில் படகு மூழ்கியது. படகில் இருந்த சுகந்தன், சேவியர் ஆகியோரை இலங்கை கடற்படையினர் மீட்டனர். எனது கணவர் 2 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டார்.
சர்வதேச எல்லையில் இந்திய கடற்படையிடம் எனது கணவரின் உடலை இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர். பின்னர் கணவரின் உடலை முழுவதும் திறந்து காட்டாமலேயே அடக்கம் செய்துவிட்டனர்.
எனது கணவரை இலங்கை கடற்படையினர் கொலை செய்திருக்க வாய்ப்புள்ளது. அவரது முகத்தில் காயங்கள் இருந்தன. எனது கணவர் கொலை தொடர்பாக தமிழக போலீஸார் வழக்குப் பதிவு செய்யவும், உடலை மறு பிரேத பரிசோதனை செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.கருணாநிதி வாதிட்டார்.
பின்னர் நீதிபதி, மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தால், அதை எளிதாக விட முடியாது. உயிரிழந்த மீனவரின் மனைவியின் சந்தேகங்களை தீர்ப்பது அரசின் கடமை. புதுக்கோட்டை அரசு மருத்துவமனை தடயவியல் துறை மருத்துவர் தமிழ்மணி மற்றும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவர் சரவணன் ஆகியோர் வட்டாட்சியர் முன்னிலையில் மனுதாரரின் கணவர் உடலை நவ. 18-ம் தேதி மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும்.
அப்போது மனுதாரர் தரப்பில் தடயவியல் துறை மருத்துவர் சேவியர் செல்வ சுரேஷ் உடன் இருக்கலாம். பிரேதப் பரிசோதனை அறிக்கையை நவ. 24-ல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago