அரசு அறிவித்த அகவிலைப்படியை வழங்கக் கோரி - பட்டு கைத்தறி நெசவாளர்கள் திருபுவனத்தில் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

தமிழ அரசு கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு அறிவித்த அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வலியுறுத்தி, திருபுவனத்தில் பட்டு கைத்தறி நெசவாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த அக்.6-ம் தேதி நடைபெற்ற கைத்தறி மானிய கோரிக்கை விவாதத்தின்போது, கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், இதுவரை உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. எனவே, அரசு அறிவித்த அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்.

கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத்தை மாதத்தின் முதல் வாரத்திலேயே வழங்க வேண்டும்.

மத்திய, ‌மாநில அரசுகள் காதிக்கு வரிவிலக்கு அளித்ததுபோல, கைத்தறி நெசவாளர்கள் நெய்யும் கைத்தறி துணிகளுக்கும் ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் கைத்தறி துணி நூல் உதவி இயக்குநர் அலுவலகம் முன்பு பட்டு கைத்தறி நெசவாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு, தமாகா தேசிய நெசவாளர் சங்கத் தலைவர் எம்.ஜி.சிவாஜி தலைமை வகித்தார். ஏஐடியுசி மாவட்ட குழு உறுப்பினர் ஹரிதாஸ், தேசிய நெசவாளர் சங்க செயலாளர் என்.பி.நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் , மாவட்ட துணைத்தலைவர் சா.ஜீவபாரதி, ஏஐடியுசி மாநில கைத்தறி சம்மேளன செயலாளர் எஸ்.பி.ராதா, தமாகா நெசவாளர் அணி மாநில பொதுச்செயலாளர் செல்வம், ஒருங்கிணைப்புக் குழு நாராயணசாமி, நாகேந்திரன், பக்கிரிசாமி, மணி மூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்