பெரம்பலூர் மாவட்டத்தில் நிகழாண்டு சின்ன வெங்காய பயிர்களில் தாக்கியுள்ள வேரழுகல் நோயால் மகசூல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மாநிலத்திலேயே மிக அதிக பரப்பளவாக, பெரம்பலூர் மாவட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 7 ஆயிரம் ஹெக்டேரில் சின்ன வெங்காய பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. நிகழாண்டு, சின்ன வெங்காயம் பயிர் செய்தவர்கள் விலைவீழ்ச்சி, நோய்த் தாக்குதல் போன்ற காரணங்களால் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.
70- 80 நாள் பயிரான சின்ன வெங்காய பயிர்களை ஆண்டுக்கு 3 அல்லது 4 பருவங்களில் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். நிகழாண்டு ஆடிப் பட்டத்தில் விதைப்பு செய்த சின்ன வெங்காயம் அறுவடையானபோது, மிகவும் விலை வீழ்ச்சியடைந்ததால், பெரும் இழப்பை சந்தித்தனர்.
இந்நிலையில், புரட்டாசி பருவத்தில் பயிர் செய்த சின்ன வெங்காய பயிர்களில் தொடர் மழையால் பூஞ்சைகளால் ஏற்படும் வேரழுகல் நோய் ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் மேலும் இழப்பை சந்தித்துள்ளனர்.
இதுகுறித்து சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறியது: கடந்த சில ஆண்டுகளாக பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காய பயிர்களில் வேரழுகல் நோய்த் தாக்குதல் காணப்படுகிறது. எனவே, இந்நோயை எதிர்கொண்டு வளரும் வகையில், மேம்படுத்தப்பட்ட விதை வெங்காயத்தை வேளாண் துறையினர் உருவாக்க வேண்டும். மேலும், மானிய விலையில் தரமான விதை வெங்காயம், பூஞ்சாணக் கொல்லி, இடுபொருள் ஆகியவற்றை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து தோட்டக்கலை துறை துணை இயக்குநர் இந்திராணி‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:
வேரழுகல் நோயால் சின்ன வெங்காய பயிர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேளாண் அலுவலர்கள் ஆய்வு செய்து, பயிர் பாதுகாப்பு முறை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மண்ணில் தங்கியுள்ள பூஞ்சைகள், மழைக் காலங்களில் மிக வேகமாக பரவி சின்ன வெங்காய பயிர்களை பெரிதும் பாதிக்கும்.
எனவே, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிரிடுவதை தவிர்த்து, பயிர் சுழற்சி முறையைப் பின்பற்றி வேறு பயிர்களை பயிரிட வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago