கரூர் மாவட்டத்தில் ஆண்டு சராசரியைவிட தற்போதே அதிக அளவு மழை பெய்துவிட்டது என மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் டி.பி.ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம், மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், தமிழக அரசின் கைத்தறித் துறை ஆணையருமான டி.பி.ராஜேஷ் தலைமையில், ஆட்சியர் த.பிரபுசங்கர் முன்னிலையில் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
தொடர்ந்து, கரூர் அருகேயுள்ள ஆண்டாங்கோவில் அமராவதி தடுப்பணையில் உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதை கண்காணிப்பு அலுவலர் டி.பி.ராஜேஷ் பார்வையிட்டார். பின்னர், 3 ஆறுகள் சங்கமிக்கும் திருமுக்கூடலூர் பகுதியில் தீயணைப்புத் துறையின் சார்பில் நடத்தப்பட்ட பேரிடர் கால மீட்பு ஒத்திகையைப் பார்வையிட்ட அவர், செய்தியாளர்களிடம் கூறியது: கரூர் மாவட்டத்தில் ஓராண்டில் பெய்யும் சராசரி மழையளவு 652.2 மி.மீ. ஆனால், தற்போது வரை மட்டுமே சராசரியைவிட 116.67 மி.மீ கூடுதலாக 768.87 மி.மீ மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பகுதிகளாக 76 இடங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. பயிற்சி பெற்ற பேரிடர் மீட்புக்குழுவினர் 73 பேர் தயாராக உள்ளனர். மழை பாதிப்பு குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு முதல் தகவல் தெரிவிக்கும் பணியில் கிராம அளவில் 1,765 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்மழையால் 16 குடிசைகள் பகுதியளவிலும், ஒரு குடிசை முழுவதும், குடிசை அல்லாத 46 வீடுகள் பகுதியளவும் பாதிக்கப்பட்டுள்ளன. 20,000 மணல் மூட்டைகள் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரங்கள், பொக்லைன்கள், ஜெனரேட்டர்கள் என அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றார்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், எஸ்.பி ப.சுந்தரவடிவேல் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago