வடகிழக்கு பருவமழை பெய்து வருவதையொட்டி, அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் அனில் மேஷ்ராம் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
ஜெயங்கொண்டத்தை அடுத்த குருவாலப்பர்கோவில் பொன்னேரியில் நடைபெற்று வரும் 2-வது பாசன மதகு கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட அவர், அப்பணிகளை விரைந்து முடித்து, கரையை பலப்படுத்த உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, செங்கராயன் ஓடையில் ஏற்பட்ட வெள்ளத்தால் மூழ்கியுள்ள படைநிலை-கோவில்வாழ்க்கை தரைமட்ட பாலத்தை பார்வையிட்டு, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள போலீஸாருக்கு உத்தரவிட்டார். மேலும், வருவாய் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தினார். முன்னதாக, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தில் அனில் மேஷ்ராம் பங்கேற்று பேசினார்.
இந்த நிகழ்வுகளின்போது, ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி, மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னுலாப்தீன் உட்பட பல்வேறு அரசு துறைகளின் அதிகாரிகள் உடனிருந்தனர்.
முன்னதாக நேற்று முன்தினம் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும்பொருட்டு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் அனில் மேஷ்ராம் தலைமையில், ஆட்சியர் ப. வெங்கடபிரியா முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் பேசியது:
பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் பேரிடர் ஏதேனும் ஏற்படும்பட்சத்தில், பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக சமுதாயக்கூடங்கள், பள்ளிக்கட்டிடங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் என 67 கட்டிடங்கள் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை 04328 1077, 1800 425 4556 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களிலும், 9445000458, 7402607785, 9384056223 ஆகிய செல்போன் எண்களிலும் தெரிவிக்கலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றார்.
முன்னதாக, வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குட்பட்ட விசுவகுடி நீர்த்தேக்கத்துக்கு சென்று, அங்குள்ள நீர்வரத்து, நீர்மட்டம், நீர் வெளியேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, கோட்டாட்சியர் நிறைமதி சந்திரமோகன், நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர் வேல்முருகன் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago