திண்டுக்கல்லில் நீண்ட இடைவெளிக்கு பிறகு - உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் : மலர் தூவி, ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்று பள்ளிகள் திறப்பால் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்குச் சென்றனர்.

அவர்களை மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் ஆசிரியர்கள் வரவேற்றனர்.

கரோனா பெரும் தொற்றால் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிக்கு வரும் மாணவர்களை உற்சாகமாக வரவேற்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

வடமதுரை அருகே பா.புதுப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் சீரியல் செட் போடப்பட்டு இரவில் பள்ளி ஜொலித்தது. வகுப்பறையில் கலர் காகிதங்களை கொண்டு பல்வேறு வடிவ தோரணங்கள் செய்யப்பட்டிருந்தன.

நேற்று காலை முதல் முகக்கவசம் அணிந்து பெற்றோர் பாதுகாப்புடன் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் முதல் பள்ளிகளுக்கு வரத் தொடங்கினர். ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி மாணவர்களை வரவேற்றனர்.

வடமதுரை அருகே உள்ள செம்மனம்பட்டி கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு வந்த மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் அட்சதை தூவியும் வரவேற்றனர்.

இந்நிகழ்வில் பெற்றோர், ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர். மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்