நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்று முதல் மீண்டும் பள்ளிகளுக்கு வந்த 1 முதல் 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு முதல் 15 நாட்களுக்கு கதை, பாட்டு, விளையாட்டு, ஓவியம் மட்டுமே கற்பிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் மாநகராட்சி பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு நேற்று (1-ம் தேதி முதல்) 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பதற்கு உத்தரவிட்டது. அதன்படி மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளில் நேற்று கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவ, மாணவிகள் வந்தனர்.
சிங்காரத்தோப்பு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் நேரில் சென்று அப்பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் மறைமலை அடிகளார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அப்பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் பாடத்திட்டங்கள் மற்றும் பொது அறிவு குறித்து ஆணையாளர் அவர்கள் கலந்துரையாடினார்.
அப்போது முதல் 15 நாட்களுக்கு கதை, பாடல், விளையாட்டு, ஓவியம் வரைந்து வர்ணம் தீட்டுதல், கலந்துரையாடல் போன்ற பல்வேறு மனமகிழ்ச்சி தரும் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், முக்கியமான பாடக் கருத்துக்களை உள்ளடக்கிய புத்தாக்க பயிற்சிகளையும் அடுத்தடுத்து முறையாக செயல்படுத்திய பிறகு பாடத் திட்டத்தை தொடங்குமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது கல்வி அலுவலர் ஆதிராமசுப்பு, தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago